நியூஸ்பாண்ட்:

“நடிகர் கமலுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கருத்து தெரிவிக்கக் கூடிய அளவுக்கு கமலை மிக முக்கிய நபராக நான் நினைக்கவில்லை” என்று கனிமொழி காட்டமாகத் தெரிவித்திருப்பது, வேறுவித யூகத்தை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது.

சமீபமாக நடிகர் கமல்ஹாசன், ஆளும் அ.தி.மு.க. அரசை கடுமையாக சாடி வருகிறார். இது குறித்து அவர் வெளியிடும் ட்விட்டுகள் சில புரிந்தும் புரியாமல் இருந்தாலும், ஆளும் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார் என்பது தெளிவாகவே புரிகிறது.

இந்த நிலையில் கமலை, தி.மு.க. இயக்குகிறது என்ற விமர்சனம் எழுந்தது. அதற்கு அக் கட்சியின் எம்.பி. கனிமொழி காட்டமாக பதில் அளித்தார்.

“மற்றவர்கள் இயக்கி, இயங்கக் கூடியவர் அல்ல கமல்” என்று தெரிவித்த கனிமொழி, “திமுக என்ற பேரியக்கத்துக்கு தலைவர்கள் இருக்கிறார்கள். செயல் தலைவர் இருக்கிறார். கோடிக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். மக்கள் ஆதரவு அமோகமாக உள்ளது. எங்களுக்கு வேறு யார் தயவும் தேவை இல்லை. கமல் ஹாஸனை திமுக இயக்கவில்லை.. யாரையும் இயக்கி அதன் மூலம் ஆதாயம் அடைய வேண்டிய நிலை தி.மு.க-வுக்கு இல்லை. கமல்ஹாசனுக்கு தி.மு.க. உதவி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை,” என்று காட்டமாக தெரிவித்தார்.

இது நடந்தது மூன்று வாரங்களுக்கு முன்.

இந்த நிலையில், நேற்று, “ஊழல் அதிமுக அரசை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று ஏன் எந்தக் கட்சியும் வலியுறுத்தவில்லை” என்று கமல் ட்விட்டினார்.

ஸ்டாலின் – கமல்

மேலும், “ ‘அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால், தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்தும், எந்த அரசியல் கட்சியும் முதலமைச்சரின் ராஜினாமாவைக் கோராதது ஏன்?. எனது குறிக்கோள் தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்வதே. என்னுடைய குரலுக்கு வலுச் சேர்க்கும் துணிவு யாருக்கெல்லாம் இருக்கிறது?. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதற்கான கருவி மட்டுமே. கருவியின் முனை மழுங்கிவிட்டால் வேறு கருவிகளைக் கண்டறிவோம். ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும், லெல்வோம்’ என்று கமல்ஹாசன் பதிவிட்டார்.

இதுவும் வழக்கம்போல, பற்றிக்கொண்டது. இந்த ட்விட் குறித்து தி.மு.க.வைச் சே்ரநமாநிலங்களவை உறுப்பினர்

டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், “கமல் ஒரு பொதுவான கருத்தைக் கூறியுள்ளார். தற்போதுள்ள கட்சிகள் கூர் மழுங்கி விட்டால் கூரான மற்றொரு அமைப்பைத் தேட வேண்டும் என் அவர் கூறியுள்ளார். திமுகவை குறிப்பிட்டு அவர் கருத்து வெளியிட்டுள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை” என்றார்.

இந்த நிலையில் மாநிலங்களவை திமுக குழுத்தலைவர் கனிமொழி, “கமலுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கருத்து தெரிவிக்கக் கூடிய அளவுக்கு கமலை மிக முக்கிய நபராக நான் நினைக்கவில்லை” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கமல் ட்விட்டுக்கு தி.மு.க. சார்பில் டி,கே.எஸ். இளங்கோவன் பதில் அளித்திருக்கும் நிலையில், கனிமொழி இப்படித் தெரிவித்திருப்பது அரசில் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

“கமல் மீது கனிமொழிக்கு என்ன கோபம்” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே நேரம், “கனிமொழிக்கு கமல் மீது கோபம் இல்லை. தி.மு.க. செயல்தலைவரும் தனது அண்ணனுமான ஸ்டாலின் மீதான கோபத்தைத்தான் இப்படி வெளிப்படுத்தி இருக்கிறார். தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி இதழின் பவளவிழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இதை

கனிமொழி

முன்னின்று நடத்தியவர் மு.க.ஸ்டாலின். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். அதோடு விழாவில் கமல் சிறப்புரை ஆற்றினார். அதே நேரம் கனிமொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆகவே ஸ்டாலின் மீது வருத்தத்தில் இருக்கும் கனிமொழி, அதை நேரடியாக வெளிப்படுத்த முடியாத நிலையில் கமல் மீது தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார்” என்றும் ஒரு பேச்சு அக்கட்சி வட்டாரத்தில் அடிபடுகிறது.

“அ.தி.மு.க.வில் உட்கட்சி குழப்பம் உச்சத்தில் இருப்பதைப் பயன்படுத்தி அக் கட்சியை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்டுவிக்கிறது. இந்த நேரத்தில் தி.மு.கவுக்கள் உட்கட்சி பூசல்.. குறிப்பாக குடும்ப பூசல் ஏற்படுவது கட்சிக்கு மட்டுமல்ல.. தமிழகத்துக்கும் நல்லதல்ல” என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்துவருவதாகவும் கூறப்படுகிறது.