டெல்லி: ஜேஎன்யு முன்னாள் தலைவரும், இந்திய கம்யூனிஸ்டுகட்சியின் இளந்தலைவருமான கன்னையாகுமார் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப் படுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்த நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது உறுதி என கூறப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு தலைநகர் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் இந்தியாவிற்கு எதிராக பேசியதாக , மாணவர் தலைவர் கன்னையாகுமார் உள்ளிட்ட மாணவர்கள் மீது டில்லி போலீசார் தேச துரோக வழக்கு பதிந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின்மூலம் மக்களிடையே பிரபலமானவர் கன்னையாகுமார். பின்னர், அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.

இவர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர்மீது கட்சி நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்தது. இதனால், கட்சியின் மீதான அதிருப்தியின் காரணமாக  இருந்து வந்த கன்னையா குமார் காங்கிரஸ் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் செய்து வருகிறார்.

இதன் பயனாகவே, செப்டெம்பர் 10ஆம் தேதி  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். இச்சந்திப்பில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் உடனிருந்தார். இதையடுத்து, கன்னையாகுமார் காங்கிரஸ் கட்சியில் சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல, மற்றொரு இளந்தலைவரான ஜிக்னேஷ் மேவானியையும் காங்கிரஸ் இணைக்கும் படலம் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு (2020) உத்தரப் பிரதேச மாநில  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறந்த பேச்சாளரான கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்ற இளந்தலைவர்களை இழுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸ் தலைமையுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் கன்னையாகுமாரை, சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா  சந்தித்து பேசியிருப்பதாகவும் தலைநகர தகவல்கள் தெரிவிக்கின்ன. இதனால், கன்னையா குமார் தனது ஆதரவாளர்களுடன் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவரான கன்னையா குமார் பீகார் மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த  மூன்று தசாப்தங்களாக பீகாரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முடியாமல் உள்ள நிலையில், அதை சரிக்கட்டும் வகையில், அவரை கட்சியில் இறக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாகவும் தெரிகிறது.

மேலும்,  பேச்சு திறமைக்கு பெயர் பெற்ற குமார் காங்கிரசில் சேர்ந்தால், கட்சி அவரை உத்திரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியும் என காங்கிரஸ் தலைமை விரும்புவதாகவும்,  அண்மைக் காலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராத்திய சிந்தியா, சுஷ்மிதா தேவ், ஜிதின் பிரசாதா, போன்ற தலைவர் வெளியேறினர். இச்சூழலில் கன்னையா குமாரின் வருகை கட்சிக்கு புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரையும் காங்கிரஸில் சேர்க்கும் முயற்சி நடைபெற்று வருவது குற்றப்பிடத்தக்கது.