வேளாண் சட்டங்கள் குறித்து நான் பேசியது அனைத்தும் எனது சொந்த கருத்து அதற்கும் பாஜக-வுக்கும் தொடர்பில்லை என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கிக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டவர் நடிகை கங்கனா ரணாவத்.

பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இவர் 2024 தேர்தலில் பாஜக வேட்பாளராக ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் இருந்து லோக்சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விவசாயிகள் குறித்து பல்வேறு சமயங்களில் தவறாக பேசி வந்த கங்கனா ரணாவத் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் விமான நிலையத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.

இருந்த போதும் தனது சர்ச்சை பேச்சை தொடர்ந்து வரும் அவர் கடந்த இறுதினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில் அவரது பேச்சுக்கும் பாஜக-வுக்கும் தொடர்பு இல்லை என்று பாஜக விளக்கமளித்து.

இந்த நிலையில் கங்கனா ரணாவத், செய்தியாளர்கள் தன்னிடம் வேளாண் சட்டங்கள் பற்றி கேட்டதாலேயே அதை பிரதமர் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கூறினேன் மற்றபடி இது எனது சொந்த கருத்து தானே ஒழிய கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று விளக்கமளித்ததுடன் தனது பேச்சுக்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.