திருச்செந்தூர்: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாக தொடங்கியது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக கந்த சஷ்டி விழா உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதி முடிந்து கந்த சஷ்டி துவங்குகிறது .அதன்படி இந்த ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதியான இன்று தொடங்கி உள்ளது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழாவுக்கு பல லட்சம் பேர் திருச்செந்தூரில் முகாமிட்டு சஷ்டி விரதம் கடைபிடித்து வருகின்றனர். கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுவதில், . முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.2) காலை யாகசாலை பூஜையுடன் கோலகலமாக தொடங்கியது.
இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு 1 மணியளவில் கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், 2 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார்.
காலை 7 மணியளவில் யாகசாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது .
தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.
மேலும், பக்தர்கள் அங்கப்பிரதட்சிணம், அடிப்பிரதட்சிணம் செய்தும் கந்தசஷ்டி பாடல்களை பாடியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
விரதம் இருக்ககூடிய பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் 18 இடங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கும் வகையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற 7ம் தேதி நடைபெறுகிறது.
கோவில் நடை திறந்திருக்கும் நேரம்:
கந்த சஷ்டி விழா காலங்களில் கோவிலின் நடை திறக்கப்படும் நேரம் மாற்றப்படுகிறது .அதன்படி நவம்பர் இரண்டாம் தேதி அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3;30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது .
நவம்பர் 7ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் கரையில் மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை நடைபெறுகிறது.
நவம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30க்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.
நவம்பர் 8ம் தேதி 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.
அன்று இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.