காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வழிபாட்டின்போது வடகலை, தென்கலை, பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.
அத்திவரதர் கோவிலான வரதராஜ பெருமாள் கோவிலில், வேத பராயணம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினரிடம் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இடங்களில் தென்கலையும், குறிப்பிட்ட இடத்தில் வடகலையும் பாசுரம் படிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
இந்நிலையில் இராப்பத்து உற்சவத்தின் ஏழாவது நாளான நேற்று, கோவிலுக்குள்ளேயே சாமி புறப்பாடு நடைபெற்றது. அப்பொழுது பெருமாளின் முன்பு பாசுரம் பாட முயன்ற தென்கலை பிரிவினரை, வடகலை பிரிவினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் பிடித்து தள்ளிக்கொண்ட நிலையில், போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் பிரித்துவிட்டனர்.