காஞ்சிபுரம்
ரூ.10 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் கோவில் நிலம் அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உலகப் புகழ் பெற்றதாகும். காஞ்சி நகரின் மையப்பகுதியான கீரை மண்டபம் அருகில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் கோவிலுக்குச் சொந்தமாக 76 செண்ட் அளவிலான மனை உள்ளது. இந்த இடத்துக்கு வெங்கடகிரி ராஜா தொட்டம் எனப் பெயராகும். இதை அதே தெருவைச் சேர்ந்த கே பி மணி மற்றும் சுரேஷ் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர்.
கோபில் நிர்வாகம் இந்த நிலத்தைத் திரும்பப் பெற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த நிலம் ஏகாம்பரநாதர் கோவிலுக்குச் சொந்தமானது என அறிவிக்கப்பட்டு உடனடியாக அதை மீட்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டது. இதையொட்டி நேற்று அறநிலையத்துறை ஆணையர் ஜெயா தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்துக்குச் சென்று அதைப் பூட்டி சீல் வைத்தனர்.
மீட்கப்பட்ட இந்த சொத்து தற்போது கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் இந்த சொத்தின் மதிப்பு ரூ.10 கோடி எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விரைவில் இந்த கோவிலின் சொத்துக்கள் ஒவ்வொன்றாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளார்.