சென்னை: காஞ்சிபுரம் காவல்துறை டிஎஸ்பியை தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவத்தில்  மாவட்ட  நீதிபதி செம்மல்-ஐ சஸ்பெண்ட்  செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வலாஜாபாத் பகுதியில் சிவக்குமார் என்பவர் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்த முருகன் என்பவருக்கும் சிவக்குமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிவக்குமாரின் மருமகனும் காவல் துறையில் பணியாற்றி வருபவருமான லோகேஸ்வரன் உள்பட நான்கு பேர், தாக்கியதாக வாலாஜாபாத் காவல்நிலையத்தில் முருகனின் மனைவி பார்வதி புகார் மனுவை அளித்தார். இதனையடுத்து இரு தரப்பையும் விசாரித்த போலீசார் சி.எஸ்.ஆர் வழங்கியுள்ளனர். அடுத்த சில நாட்களில் இரு தரப்பிற்கும் இடையே சமாதானம் ஏற்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக செப்டெம்பர் 4 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கினார். அப்போது இந்த வழக்கு மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்.? குற்றவாளிகளை கைது செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆஜரானார். அப்போது அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த உத்தரவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறயிடப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி சங்கர் கணேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ரிமாண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நீதிபதி செம்மல் அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மலை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

[youtube-feed feed=1]