காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி  என்ற நபர் இருந்து வரும் நிலையில், அவருக்கு எதிராக திமுக உள்பட எதிர்க்கட்சி களைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்து உள்ளனர். இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் இருந்து வருகிறார். இவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், மற்ற கவுன்சிலர்களை மதிப்பது இல்லை என்றும், தனது கட்சி கவுன்சிலர்களைக்கூட கண்டுகொள்வது இல்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து கட்சி தலைமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மேயர் மகாலட்சுமியை மாற்ற வலியுறுத்தி, திமுக கவுன்சிலர்கள் எதிர்க்கட்சிகளான,  அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் திமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த மகாலட்சு மி உள்ள நிலையில் தற்போது மேயர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை தெரிவித்து ஆளும் திமுக உட்பட அதிமுக, பாமக, பாஜகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர்ந்து மேயரை மாற்றிட கோரி போர் கொடி தூக்கியுள்ளனர்.  இதையடுத்து நேற்று, காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பத்து பேர்  தாங்கள் வகித்து வந்த நிலைக் குழு பதவிகளை ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆனையரிடம்  கடிதம் வழங்கியதுடன், தங்களது  நிலைக்குழு பதவிகளை புறம் தள்ளியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே, காஞ்சிபுரம் மாநகராட்சியில் கணக்கு குழு, பொது சுகாதாரக் குழு, கல்விக் குழு, வரி விதிப்பு மற்றும் நிதிக் குழு, நகரமைப்புக் குழு, பணிகள் குழு என 7 நிலைக்குழுவில் ஏற்கனவே பணிகள் குழுவின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது எங்கள் வார்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் சரி வர மேற்கொள்ளாததால் தங்களுக்கு இந்த பதவிகள் இருந்தும் எவ்வித பயனில்லை எனக் கூறி பொது சுகாதாரக் குழுவைச்சேர்ந்த 01 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்மா பேகம் (தி.மு.க ), 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜி.குமரன் (தி.மு.க), 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் புனிதா சம்பத் (அ.தி.மு.க), 37 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரளா சம்பத் (தி.மு.க) மற்றும் கணக்கு குழுவைச் சேர்ந்த 06 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரியா குழந்தைவேலு (தி.மு.க) 10 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி சண்முகம் (பா.ம.க) ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

மேலும் நகரமைப்பு குழுவைச் சேர்ந்த 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஷோபனா கண்ணன் (தி.மு.க), 35 வது மாமன்ற உறுப்பினர் வார்டு ரமணி பொன்னம்பலம்(தி.மு.க), வரிவிதிப்புக்குழுவைச் சேர்ந்த 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.சங்கர் (தி.மு.க), 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பானுப்பிரியா சிலம்பரசன் (சுயே) ஆகிய 10 மாமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிகளை இன்று ராஜினாமா செய்துள்ளனர். அதற்காக காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகனை நேரில் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை 10 மாமன்ற உறுப்பினர்களும் கூட்டாக ஒன்று சேர்ந்து வழங்கியுள்ளனர்.

ஏற்கனவே இந்த ஏழு நிலைக் குழுவில் பணிகள் குழு ராஜினாமா செய்த நிலையில், இன்று ஒரே நாளில் நான்கு குழுக்கள் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஆளும் திமுக மற்றும் அதிமுக, பாமக, பாஜக, சுயேட்சை உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு வழங்கி இருக்க கூடிய நிலையில், தொடர்ந்து அவருக்கு எதிராக மாமன்ற உறுப்பினர்கள் பலர் தொடர் குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் முன்வைத்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் நிலைக்குழு பதவுகளை 10 மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ராஜினாமா செய்து அப்பதவிகளை புறம்தள்ளியுள்ளது காஞ்சிபுரம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமைக்கும் நெருக்கடியை கொடுத்துள்ளது.