சென்னை:
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்பட மத்திய, மாநிலஅமைச்சர்கள், ஆன்மிக தலைவர்கள், அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் ஜெயேந்திரர் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இச்செய்தி கேட்டு வேதனையும், துயரமும் அடைந்தேன்.
காஞ்சி ஜெயேந்திரர் மடாதிபதி என்பதைக் கடந்து கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை தொடங்கி சேவை நோக்கத்துடன் நடத்தி வந்தார். காஞ்சி மடத்தின் சார்பில் ஏராளமான தொண்டு நிறுவனங்களையும் நடத்தி வந்தார்.
நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த அயோத்தி சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரது மறைவு அவரைச் சார்ந்த அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிடர் கழகத்தவைர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
காஞ்சி சங்கரமடத்து மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள், இன்று காலை தனது 83வயது வயதில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.
அவருடனும், அவரது மடத்துடனும் திராவிடர் கழகத்துக்கு எவ்வளவு மலையளவு கருத்து கொள்கை வேறுபாடுகள் இருப்பினும், திராவிடர் கழகம் அவரது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத தெரிவித்துக்கொள்கிறது.