கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருக்கள்வனூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.
வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்களது பேச்சு அழகு பக்கம் திரும்பியது. அப்போது மகாலட்சுமி தான் மிகவும் அழகாக இருப்பதாகவும், தன்னைக் கண்டாலே மக்கள் செழிப்புற்று வாழ்வர் என்றும் பெருமையாகப் பேசினாள். அதோடு விடாமல் மகாவிஷ்ணு, “கருமை நிறக் கண்ணனாக” இருப்பதையும் சுட்டிக்காட்டினாள். அவரோ “அகத்தில் இருப்பதுதான் உண்மையான அழகு, புறத்தில் இருப்பது மாயையில் சுழல வைப்பது” என்று அமைதியாக சொல்லிப் பார்த்தும் அவள் கேட்பதாக இல்லை. அழகு மீது கர்வம் கொண்டிருந்த மகாலட்சுமிக்குப் பாடம் கற்பிக்க எண்ணினார் விஷ்ணு. “பெண்ணுக்கு அழகு இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் இருக்கக் கூடாது. எந்த அழகு மீது அளவு கடந்த பற்று வைத்துவிட்டாயோ அந்த அழகு இருக்கும் உருவமே இல்லாமல் அரூபமாக போவாயாக” என சாபம் கொடுத்து விட்டார். கலங்கிய மகாலட்சுமி தவறை உணர்ந்து தன்னை மன்னித்து, சாப விமோசனம் தரும்படி கேட்டாள். “பூமியில் எங்கு ஒரு முறை செய்யும் தவத்திற்கு ஒரு கோடி முறை தவம் செய்த பலன் கிடைக்குமோ, அங்கு சென்று தவம் செய்தால் உனது பாவத்திற்கு விமோசனம் கிடைக்கும்” என்றார் விஷ்ணு.
சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதிதேவி, தன் சாபம் நீங்க, காஞ்சியில் தவம் இருந்து ஏகாம்பரேசுவரரை வணங்கி விமோசனம் பெற்றாள். அவளது பாவத்தை போக்கிய இத்தலத்திற்கு வந்த மகாலட்சுமி, அரூபமாகத் தங்கி விஷ்ணுவை வணங்கி வந்தாள். கொஞ்சம், கொஞ்சமாக அரூப வடிவம் மாறி உருவம் பெற்றாள். தவத்தின் பயனால் முன்னைவிட அழகு மிகுந்தவளாக இருந்த மகாலட்சுமியை பார்க்க வேண்டுமென விஷ்ணுவுக்கு ஆசை எழுந்தது. எனவே, அவளை கள்ளத்தனமாக எட்டிப்பார்த்தார். இதனால் இவருக்கு “கள்ளப்பெருமாள்” என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பஞ்சதீர்த்தக் கரையில் லட்சுமியும், பார்வதியும் பேசிக்கொண்டிருந்ததை இவர் ஒளிந்திருந்து கேட்டதால் பார்வதி இவரை, “கள்வன்” என்று அழைத்ததால் இப்பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு உண்டு.
இங்கு காமாட்சி அம்பாளே பிரதானம் என்பதால் அவளுக்கு படைக்கப்படும் நைவேத்யங்களே கள்வப்பெருமாளுக்கும் படைக்கப்பட்டு, அதே பூஜைகளே இவருக்கும் நடக்கிறது. சாம்பிராணி தைலத்தால் மட்டும் அபிஷேகம் செய்கிறார்கள். தசரதர் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் நடத்தும் முன்பே இங்கு வந்து காமாட்சியையும், இப்பெருமாளையும் வணங்கிச் சென்றுள்ளார். தனது இராம அவதாரத்திற்கு தன்னிடமே வந்து தசரதரை வேண்டச் செய்த பெருமாள் இவர். சிவபக்தரான துர்வாசர் இவரை வணங்கிச் சென்றுள்ளார். கருவறைக்கு முன்புள்ள காயத்ரி மண்டபத்தின் அமைப்பு போலவே அதற்கு கீழே ஒரு மண்டபமும், அதன் மத்தியில் காமாட்சி அன்னையும் இருக்கிறாளாம். அதாவது தங்கைக்கான கோயிலே என்றாலும் அண்ணனுக்கு பணிந்து அவருக்கு கீழே அம்பாள் இருப்பதாக சொல்கிறார்கள். இதனால் இம்மண்டபத்திற்குள் செல்பவர்கள் நிற்காமல் அமர்ந்த நிலையிலேயே தரிசிக்க வேண்டும். அண்ணன் – தங்கைகள், இங்கு ஒரேநேரத்தில் காமாட்சியையும் கள்வப்பெருமாளையும் வேண்டிக்கொண்டால் அவர்களுக்குள் ஒற்றுமை கூடும் என்பது நம்பிக்கை.
கள்வப்பெருமாள், காமாட்சி அம்மன் கோயிலில் கருவறைக்கு வெளியே காயத்ரி மண்டபத்தில் வலப்புறத்தில் உள்ள ஒரு சுவரில் தென்கிழக்கு திசையை நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறத்தில் காமாட்சி அம்மனின் கருவறைச்சுவரில் மகாலட்சுமி தாயார் இருக்கிறார். பொதுவாக மகாலட்சுமி நான்கு கைகளுடன் வரம் தரும் கோலத்தில் தான் இருப்பார். ஆனால், இவரோ இரண்டு கைகளுடன் சுவாமியை வணங்கிய கோலத்தில் இருக்கிறார். தன் கர்வம் அழியப்பெற்றதால் இலட்சுமி பணிவுடன் வணங்கியதாக இக்கோலத்தை சொல்கிறார்கள். இதற்கு நேர் பின்பகுதியில் உள்ள அடுத்த சுவரில் (அம்பாள் கருவறைக்கு இடப்புற சுவரில்) இவளே “அரூப” கோலத்தில் இருக்கிறாள். இவளது கோலம் உடலை குறுக்காக பிரித்தது போல இருக்கிறது. இந்த உருவத்தின் மீது குங்குமம் போட்டு வழிபட்டால் அழகு மீது இருக்கும் மோகம் குறையும் என்பதாக நம்பிக்கை. கள்வப்பெருமாளைத் தரிசிக்க செல்பவர்கள், முதலில் அரூப லட்சுமியை வணங்கி விட்டுத்தான் சுவாமி, தாயாரைத் தரிசிக்க வேண்டும். மூலவரின் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது.
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.
பிரார்த்தனை:
விஷ்ணு, மகாலட்சுமியைத் தரிசிப்பதால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், தொழில் விருத்தியடையும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு தயிர்சாத நைவேத்யம் படைத்து விசேஷ பூஜைகள் செய்து வழிபடலாம்.