சென்னை
சென்னை பெருநகருடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரக்கோணமும் இணைக்கப்படும் என அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சட்டசபையில் சென்னை பெருநகர் வளர்ச்சி பற்றி வீட்டுவசதி, மற்றும் நகர்புற அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் கூறியதாவது :
இன்னும் ஒரு வருடத்துக்குள் சென்னை பெருநகருடன் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் இணைக்கப்படும். அத்துடன் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அரக்கோணமும் இணைக்கப்படும். தற்போது 1189 சதுர கி மீ பரப்பளவுள்ள சென்னை பெருநகரம் இணைப்புக்குப் பின் 8878 சதுர கி மீ பரப்பளவுக்கு விரியும். அதிகமாகி வரும் மக்கட்தொகை, மற்றும் புறநகர மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விரிவாக்கம் நடை பெறுகிறது. இந்த விரிவாக்கம், போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உள்துறை, விவசாய நில பாதுகாப்பு போன்றவைகளையும் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்
மேலும், “சென்னை மற்றும் புறநகரில் உள்ள மேம்பாலங்களின் கீழ் வாகன நிறுத்தங்கள், மற்றும் பூங்காக்கள் அமைக்கும் பணி பரிசீலனையில் உள்ளது. திருவல்லிகேணி, ஜார்ஜ் டவுன் ஆகிய பகுதிகளில் விரைவில் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மகாபலிபுரத்தில் 10 கோடி செலவில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் புது பேருந்து நிலையம் அமைக்கப்படும். சென்னை, செங்கல்பட்டு, கல்பாக்கம் புதுச்சேரி பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படும்” என தெரிவித்தார்