சென்னை:
னல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். சமீபத்தில் சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை இடிக்கவேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையானது.

கனல் கண்ணனின் பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் இரண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் கனல் கண்ணனை தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார். இதையடுத்து சென்னை மற்றும் புதுச்சேரியில் தனிப்படை அமைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையே ஜாமீன் கேட்டு கனல் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று புதுச்சேரியில் இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கனல் கண்ணன் கைதை கண்டித்து நாளை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.