சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராஜர், அண்ணா பெயர்ப்பலகைகள் மீண்டுடீம் அமைக்கப்பட வேண்டும் பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரும், சர்வதேச விமான நிலையத்துக்கு பேரறிஞர் அண்ணா பெயரும் ஏற்கனவே சூட்டப்பட்டது. ஆனால், பின்னர் விமான நிலைய விரிவாக்கத்தின்போது அந்த பெயர்கள் அகற்றப்பட்டன. ஆனால், இதுவரை மீண்டும் அந்த பெயர்கள் வைக்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராஜர், அண்ணா பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘மத்தியில் வி.பி.சிங் அவர்கள் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி நடை பெற்றபோது, 1989-90 ஆம் ஆண்டில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரும் சூட்டப்பட்டன. அதன் பின்னர் சென்னை விமான நிலையத்திற்கு இந்த பெயர்களே அடையாளமாக மாறியிருந்த நிலையில், விமான நிலைய நவீனமயமாக்கல் பணியின் போது, ஏற்கனவே இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டதால், அவற்றில் இருந்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன. 2013-ஆம் ஆண்டில் நவீனமயமாக்கப்பட்ட விமான நிலைய முனையங்கள் திறக்கப்பட்ட போது, அவற்றுக்கு மீண்டும் இந்த பெயர்கள் சூட்டப்படவில்லை. அவை சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என்றே அழைக்கப்பட்டன.
உள்நாட்டு முனையத்தின் பழையக் கட்டிடத்தின் மீது காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் பலகை இருந்தது. ஆனால், அதுவும் கடந்த 2020-ஆம் ஆண்டில் தகர்க்கப்பட்டு விட்டது. அதன்பின்னர் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் நீடிப்பதற்கு எந்த சாட்சியமும் இல்லை. சென்னை விமான நிலையத்தின் இணையதளத்தில் மட்டுமே உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் சூட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விமான நிலையத்திலும், விமானங்களிலும் செய்யப்படும் அறிவிப்புகளில் சென்னை உள்நாட்டு விமான நிலையம், சென்னை பன்னாட்டு விமான நிலையம் என்றே பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. விமான பயணச்சீட்டுகளிலும் காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படுவதில்லை. நீண்ட காலமாக தொடரும் இந்த அநீதியை சரி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் எந்த பயனும் ஏற்படவில்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.சென்னை விமான நிலையத்தின் விரிவாக்க மற்றும் நவீனமயமாக்கல் பணிகளுக்கும், தலைவர்களின் பெயருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சென்னை விமான நிலையப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பது உண்மை தான். ஆனால், அனைத்துப் பணிகளும் முடிவடைந்த பிறகு தான் தலைவர்களின் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. விமான நிலையங்கள் ஆணையம் நினைத்தால் சென்னை விமான நிலையத்தின் நுழைவாயிலில் காமராசர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் என்று பெயர் பலகை அமைக்க முடியும். அதேபோல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையக் கட்டிடங்கள் மீதும் இத்தகைய பெயர் பலகைகளை பொறுத்த முடியும். அது தான் முறையாகும்.
சென்னை விமான நிலையங்களின் முனையங்களுக்கு காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர்களை சூட்டுவது விமான நிலையத்தின் அடையாளத்துடன் சம்பந்தப்பட்டது ஆகும். கட்டுமானப் பணிகளை காரணம் காட்டி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக முனையங்களின் பெயர்களை அழித்து விட்டு விமான நிலையத்தை இயக்குவது எந்த வகையிலும் முறையல்ல.
எனவே, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசரின் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணாவின் பெயரும் மீண்டும் சூட்டப்படுவதை விமான நிலையங்கள் ஆணையம் விழா நடத்தி அறிவிக்க வேண்டும். விமான நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர் பொறித்த பெயர் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். விமான பயணச் சீட்டுகளிலும் காமராசர் உள்நாட்டு விமான நிலையம், அண்ணா பன்னாட்டு விமான நிலையம் என்று பெயர்கள் அச்சிடப்பட வேண்டும். இவை அனைத்தும் உடனே நடைமுறைக்கு வருவதை விமான நிலையங்கள் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்’.
இவ்வாறு கூறியுள்ளார்.