நீங்கள் இல்லாத திரைத்துறை சுவாரஸ்யமில்லாத, ஆர்வமற்ற துறையாக மாறிவிடும் என நடிகர் ரஜினிகாந்திற்கு அட்வைஸ் கொடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் உலக நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரரான நடிகர் கமல்ஹாசன், தனது மனதில் பட்டத்தை வெளிப்படையாக போட்டு உடைக்கும் சுபாவம் கொண்டவர். தமிழக அரசியல் களத்தில் சமூபத்தில் தனது மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியின் மூலம் கால் பதித்த அவர், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக குரலும் கொடுத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் உடன் கடந்த காலங்களில் போட்டி போட்டு நடித்த கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் ரஜினிகாந்திற்கே அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களின் ஆதரவு சண்டை குறித்து வெளிப்படையாக பேசியுள்ள கமல்ஹாசன், “இவர்களின் சண்டை இப்போது துவங்கவில்லை. தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே, ஒரு நடிகனுக்கு அவனது ரசிகன் குரல் கொடுப்பது வாடிக்கையான ஒன்று தான். ஆனால் அவை தரம் தாழ்ந்த விமர்சனமாக மாறிவிடக்கூடாது. இதை வரும் காலங்களில் ரசிகர்கள் உணர்ந்து தவிற்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், திரைத்துறையிலிருந்து முன்பு ரஜினிகாந்த் வெளியேறும் திட்டத்தை கொண்டிருந்தபோது தான் அவரை அழைத்ததாகவும், தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ள கமல்ஹாசன், ரஜினிகாந்த் இல்லாத திரைத்துறை ஒரு தரப்பிற்கான போட்டியாக மாறி, போதிய ஆர்வமில்லாத ஒன்றாக மாறிவிடும் என்று வருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.