சென்னை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் விடுதலை குறித்து கமலஹாசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1990 ஆம் வருடம் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு வெடிப்பில் பரிதாபமாகக் கொல்லப்பட்டார்.   அந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 7 பேர் இன்னும் சிறையில் உள்ளனர்.  இவர்களில் அந்த குண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்ததாகக்  குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனும் சிறையில் உள்ளார்.

இவர்கள் விடுதலைக்காகத் தமிழக அரசு தீர்மானம் இயற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.   ஆனால் இதுவரை அது குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காத நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்வது குறித்து அவருடைய தாயார் அற்புதம்மாள் மிகவும் போராடி வருகிறார்.   இவர்களை விடுவிக்க விரைவில் முடிவு எடுக்கக் கோரி ஆளுநரைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டரில்,

“சட்ட விசாரணை சரியாக நடந்ததா என்கிற சந்தேகத்துடனேயே பேரறிவாளனின் 30 ஆண்டு சிறைவாசம் முடியாமல் தொடர்கிறது.சட்ட,நீதி மன்றங்கள் கருத்தைக் கூறிவிட்டன.கவர்னர் எனும் ஒற்றை மனிதரின் கையொப்பம் எதற்காகக் காத்திருக்கிறது? பரவாயில்லை, தாமதப்பட்ட நீதியையாவது தாருங்கள். பேரறிவாளனை விடுவியுங்கள்.”

எனப் பதிவிட்டுள்ளார்.