சென்னை
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த விவசாயிகள் மறைவுக்கு அம்மாநில அரசுக்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடந்து வருகிறது. அவ்வகையில் உத்தரப் பிரதேசத்திலும் போராட்டம் நடந்து வருகிறது. அம்மாநிலத்தில் லக்கிம்பூர் பகுதியில் துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அந்நேரத்தில் துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சருடன் வந்த ஒரு வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்தில் நுழைந்ததில் பல விவசாயிகள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 8 பேர் உயிரிழந்து 15க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தேசிய அளவில் இந்த விவகாரம் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பினர் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும் அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் அமைச்சர் இந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ளார். அங்குச் செல்ல முயன்ற காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டிவிட்டரில், ‘உத்தரப் பிரதேச விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்த நிகழ்வு துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை. அதை வெளியுலகம் அறியக்கூடாது என எண்ணுவது உத்தரப் பிரதேச அரசின் மூர்க்கம்’ எனப் பதிந்துள்ளார்.