சென்னை,

ன்னை கடுமையாக விமர்சிக்கும் தமிழக அமைச்சர்களுடன் நடிகர் கமல் ஹாசன் ஒரே மேடையில் கலந்துகொள்ளப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவாக சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டம்  கட்டப்பட்டுள்ளது.  சுமார் 2,124 சதுர அடியில் ரூ.2.80 கோடி இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு புறமும் வாசல் வைத்து,  திராவிடர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான சிற்ப கலை வேலைப்பாடுகளுடன் இம்மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

மண்டப நடுவில் சிவாஜி கணேசன் சிலை, உட்புறத்தில் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையிலான புகைப்பட கண்காட்சிகள் இடம் பெறுகிறது.

இதை வரும் அக்டோபர் 1ம் தேதி  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருக்கிறார்.   அமைச்சர்களும் கலந்துகாள்ள இருக்கின்றனர்.

இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினருக்கு அழைப்பு அனுப்பப்பட இருக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு கலையுலக வாரிசாக கூறப்படுபவர் கமல்ஹாசன். அவரும் சிவாஜி கணேசனை தனது தந்தைக்கு நிகரானவர் என்று பல முறை தெரிவித்துள்ளார்.

அதே நேரம் சமீபகாலமாக தமிழக அரசின் செயல்பாடுகளை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துவருகிறார்கள். தமிழக அமைச்சர்கள் பதிலுக்கு கமல்ஹாசனை தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள்.

இப்போது தனிக்கட்சி துவங்கி, முதல்வர் பொறுப்பை ஏற்கத் தயார் என்கிற அளவுக்கு கமல் பேசஆரம்பித்துவிட்டார். அரசியல் புள்ளிகளை சந்தித்து ஆலோசனைகளும் நடத்தி வருகிறார்.

அதே நேரம் இன்றும்கூட தமிழக அரசின் செயல்பாட்டினை விமர்சித்து ட்விட்டியுள்ளார். இந்த நிலையில், சிவாஜி நினைவு மண்டப திறப்பு விழாவுக்கு கமல் அழைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆளுங்கட்சி வட்டாரத்தில்,”கமல், ரஜினி உள்ளிட்டோருக்கு தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்புவதா அல்லது நடிகர் சங்கத்தில் மொத்தமாக அழைப்பிதழ் வைத்துவிடுவதா என்று ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது” என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசனுக்கு நெருக்கமானவர்கள், “சிவாஜி கணேசன் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவர் கமல். அவருக்கு  தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் வைத்தாலும், நடிகர் சங்கத்தில் அழைப்பிதழ் வைத்தாலும் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வார்.  நாகரீகம் அறிந்தவர். அந்த விழாவில் நடிகர் திலகத்துக்கு கமல் புகழஞ்சலி மட்டுமே செலுத்துவார்” என்று கூறுகிறார்கள்.

ஆக, பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சர்களுடன் ஒரே மேடையில் கமல் தோன்றப்போகிறார்.