போபால் :
மத்தியபிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட்டு, பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் மாதம் முதல்- அமைச்சர் ஆனார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதால் இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டது. அந்த எம்.எல்.ஏ.க்கள் பின்னர் பா.ஜ.கவில் இணைந்தனர். அவர்களில் சிலர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுள்ளனர். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் உள்ளிட்ட 28 இடங்களுக்கு வரும் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது..
தேர்தல் பிரச்சாரம் இன்று முடிவடைய உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கமல்நாத்தின் ‘நட்சத்திர பேச்சாளர்’ அந்தஸ்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
“தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்ததால் கமல்நாத்தின் ‘நட்சத்திர பேச்சாளர்’ அந்தஸ்து நீக்கப்படுகிறது” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த கமல்நாத் “நட்சத்திர பேச்சாளர் என்பது பதவியும் அல்ல.. தகுதியும் அல்ல..” என்றார்.
“மத்தியபிரதேச வாக்காளர்கள் எளிமையானவர்கள்.. ஏழைகள் தான். ஆனால் புத்திசாலிகள்” என்று குறிப்பிட்ட கமல்நாத் “28 தொகுதிகளில் உள்ள வாக்காளர்களும் மீண்டும் எங்களுக்கு வாக்களித்து காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்துவார்கள்” என்று தெரிவித்தார்.
– பா.பாரதி