கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.
இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா குறித்து விழிப்புணர்வுக்காக பாடல் ஒன்றை எழுதி, இயக்கியுள்ளார் .
திங்க் மியூசிக் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை மாஸ்டர் லிடியன், பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா, யுவன், அனிருத், சித்தார்த், முகென், சித் ஸ்ரீராம், ஷங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர்.
இந்த வீடியோ நாளை (ஏப்ரல் 23) காலை 11 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்தப் பாடலுக்கு ’அறிவும் அன்பும்’ என்று பெயரிட்டுள்ளார் கமல்.
இந்தப் பாடலில் பல இசையமைப்பாளர்களை ஒருங்கிணைத்தது குறித்து கமல் கூறியதாவது:
“இது ஒரு உண்மையான ஜனநாயக முறைப்படி நடந்தது. நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்க இயலாத காரணத்தினால் அவர் அவர் பாடும் பகுதிகளைத் தனியாகப் படம் பிடித்தனர்.
இப்படி அவர்களாகவே வீட்டிலிருந்தபடி படப்பிடிப்பு நடந்ததால் இப்பொழுது ஒளிப்பதிவு என்று யாருடைய பெயர் போடுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. உச்சகட்ட தொழில்நுட்பக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அவரவர் எடுத்த காணொலிகளை எங்களுக்கு அனுப்பி வைக்க அதை நாங்கள் ஒன்றாகத் தொகுத்தோம்.
நான் பாடல் எழுதினேன். ஜிப்ரான் இசையமைத்தார். மற்ற பாடகர்கள் அனைவரும் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பில் இந்த நோக்கத்தினைப் புரிந்து உடனே பங்குபெற்றனர். இந்தக் கூட்டமைப்பு, எனது இனத்தின் பெருமையை இங்கு மட்டுமல்லாமல் இந்த உலகம் முழுக்கப் பறைசாற்றும்.
கலைஞர்கள் எப்பொழுதும் மக்களிடையே நம்பிக்கையை விதைப்பவர்கள். இப்பாடல் நம் அனைவருக்கும் மிகவும் கடினமான சூழலைக் கடக்கக்கூடிய வலிமையையும் வல்லமையையும் தரும் என்று உணர்த்தக் கூடியது. தக்கெனப் பிழைக்கும் என்பதை மீண்டும் நிரூபிக்கும் இந்தப் பாடல்” .
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.