சென்னை
மோடியின் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை ஒரு அவசரத்தில் பாராட்டியதற்கு மன்னிப்பு கோருகிறேன் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
கமலஹாசன் தனது ட்வீட்டுகளின் மூலம் அரசியல் கருத்துக்களை தற்போது வெளியிட்டு வருகிறார். இதனால் அவரது ட்வீட்டுகள் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. அதற்கு வரும் பின்னூட்டங்களினால் சூடு பறக்கும் விவாதங்கள் நடைபெறுகின்றன.
கடந்த நவம்பர் மாதம் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.. அதில், “மோடிக்கு வணக்கம், இந்த நடவடிக்கை அரசியலையும் தாண்டி கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. முக்கியமாக ஒழுங்காக வரி செலுத்துபவர்களுக்கு மேலும் நன்மை பயக்கும்” என தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த கருத்துக்கு நேர்மாறாக வேறொரு கருத்தை கமல் தெரிவித்துள்ளார். ஒரு தமிழ் வார இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் “நான் ஒரு அவசர கதியில் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையை பாராட்டியதற்கு மன்னிப்பு கோருகிறேன். எனது அந்தக் கருத்தை பொருளாதாரம் அறிந்த பலரும் விமர்சித்தனர். நான் முதலில் அந்த நடவடிக்கையை புரியாமல் பாராட்டினாலும், அதனால் ஏற்பட்ட தவறான விளைவுகளி பிறகு அறிந்துக் கொண்டேன். நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். அந்த நடவடிக்கை நல்லதாக இருப்பினும் அதனை நடத்திச் சென்ற விதம் தவறானது. இதற்காக பிரதமர் மன்னிப்பு கேட்டால் எனது வணக்கம் அவருக்காக காத்துக் கொண்டு உள்ளது. காந்தி போன்ற மகான்களே தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.