அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நாராயணவனத்தில் அமைந்துள்ளது.
நாராயணபுரத்தை ஆகாசராஜன் ஆண்டு வந்தார். பெருமாள் பக்தரான அவருக்கு புத்திரபாக்கியம் இல்லை. புத்திரகாமேஷ்டி யாகம் நடத்த ஆயத்தமானார். யாகசாலை அமைப்பதற்காக நிலத்தைச் சீர்படுத்தியபோது, பூமிக்கு கீழே ஏர் கலப்பையில் பட்டு ஒரு பெட்டி வெளிப்பட்டது. அப்பெட்டியில், தாமரையின் மத்தியில், பெண் குழந்தையைக் கண்டான் மன்னன். பூமாதேவியின் அம்சமான அக்குழந்தை, அலர் (தாமரை) மேல்
இருந்ததால், “அலர்மேல்மங்கை” என்று பெயர் சூட்டினான் மன்னன். தாமரைக்கு “பத்மம்” என்ற பெயரும் உள்ளதால் இவள், “பத்மாவதி” எனவும் அழைக்கப்பட்டாள்.
இதனிடையே பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவின் மார்பில் உதைக்கச் சென்றதால் கோபம் கொண்ட மகாலட்சுமி பூலோகம் வந்தாள். அவளைத்தேடி சீனிவாசனாக வந்த பெருமாள், தனது பக்தையான வகுளாதேவியின் மகனாக வளர்ந்தார். ஒருசமயம் அவர் வேட்டைக்குச் சென்றபோது, ஆகாசராஜன் அரண்மனையில் பத்மாவதியைச் சந்தித்து திருமணம் செய்ய முடிவெடுத்தார். அவர்களது திருமணம், நாராயணவனத்தில் நடந்தது.
தன் மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேற பாதுகாப்பு அருளும்படி, சிவனிடமும், அம்பாளிடமும் ஆகாசராஜன் வேண்டினான்.
சிவன் தனது அம்சமான வீரபத்திரரையும், அம்பிகை தனது அம்சமான பத்ரகாளியையும் அனுப்பி வைத்தனர். திருமணம் இனிதே நடந்தேறியது. பின்பு, ஆகாசராஜன் இங்கு வீரபத்திரர் மற்றும் பத்ரகாளிக்கு கல்யாண கோலத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினான். இக்கோயில் திருப்பதி திருமலை தேவஸ்தான கட்டுப் பாட்டில் உள்ளது.
மூலஸ்தானத்தில் 7 அடி உயரத்தில் வீரபத்திரர், பத்ரகாளியுடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறார். சுவாமியின் கிரீடத்தில் சந்திரனும், கங்காதேவியும் இருக்கின்றனர். கொடிமரம், நந்தி, பலிபீடம் இருக்கிறது. வீரபத்திரர் கோயில் என்றாலும், பெருமாளின் திருமணம் நடந்த தலமென்பதால், தீர்த்தத்தை பிரசாதமாகத் தருகின்றனர். வீரபத்திரருக்கு வெற்றிலைக் காப்பிட்டு வேண்டிக் கொள்கிறார்கள். இங்குள்ள ஐயப்பனை “பெரியாண்டவர்” என்று அழைக்கிறார்கள். அனுக்கை விநாயகர், காசி விஸ்வேஸ்வரர் சன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் இருந்து சற்று தூரத்தில், சீனிவாசர்– பத்மாவதியின் திருமணம் நடந்த தலம் இருக்கிறது. இங்கு “கல்யாண வெங்கடேசப் பெருமாள்” கோயில் உள்ளது. இத்தல வீரபத்திரரிடம் வேண்டிக்கொண்டால் திருமணத்தில் ஏற்படும் தடைகளை நீக்கி, விரைவில் திருமணத்தை நடத்தி வைப்பார் என்பதால் இவரை “திருமண காவலர்” என அழைக்கின்றனர்.
ஆடியில் தட்ச சம்ஹார விழா. ஆடியில் “தட்ச சம்ஹார” விழா நடக்கிறது. இவ்விழாவின் 5ம் நாளில் பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். அதன் பின்னர், வீரபத்திரர்
சன்னதி முன்பு ஒரு வாழை மரத்தைக் கட்டி, அதையே தட்சனாகக் கருதி வெட்டுவர். தட்ச சம்காரத்திற்கு மறுநாள் வீரபத்திரரின் உக்கிரம் தணிக்க, அவரது திருவாசியில் வெற்றிலையை செருகி பூஜை செய்கின்றனர். அடுத்த நாள் திருக்கல்யாணம் நடக்கும். விழாவின், கடைசி நாளில் மூன்று வகை நைவேத்யம், பழங்கள் படைத்து பூஜை செய்வர்.
திருமணத்தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமையாக இருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரம் வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.