சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணம், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி. (சூப்பிரண்டு) அதிரடி மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. புதிய ஆட்சியராக சரவன்குமார் ஜடவத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் 3 நாட்களாக போராட்டம் நடத்தியபோது, காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காததால், 4வது நாள் வன்முறை தலைவிரித்தாடியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து உயர்நீதிமன்றமும், சேலம் டிஐஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் காவல்துறை மற்றும் உள்துறை உயர்அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்.பி.ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியாக சரவன்குமார் ஜடவத் நியமிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக இவர் விவசாய துறையின் கூடுதல் இயக்குனராக இருந்தாவர். இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

தற்போதைய மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், சென்னை கன்னியாகுமரி இன்டஸ்ட்ரியல் காரிடார் புராஜெக்ட் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதற்கான உத்தரவை தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டு உள்ளார்.

அதுபோல,  கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய  எஸ்.பி.யாக பகலவன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பனிந்தரரெட்டி வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம்: 2வது நாளாக நடைபெற்று வரும் சிபிசிஐடி விசாரணை…