கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் நடைபெற்று முடிந்து, மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுடன் அவர் படித்த புத்தகங்களும் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக மாணவியின் உடல் எரியூட்டப்படுவதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், எதிர்காலத்தில் மீண்டும் உடற்கூறாய்வு செய்ய தேவைப்படலாம் என்பதால் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 13-ஆம் தேதி தனியார் பள்ளியில் உயிரிழந்த நிலையில், 11 நாட்களுக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. கடலூர் பெரியநெசலூர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள், உறவினர்கள் மற்றும் அமைச்சர் என பலரும் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மாணவியின் இறுதிச் சடங்கு நடைபெறும் வேப்பூர் பெரியநெசலூர் கிராமம், போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கிராமத்துக்குள் நுழையும் வாகனங்களின் எண், ஓட்டுநர் பெயர் எழுதப்பட்டு சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் தனியார் பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலம் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் கண்ணீருடன் தொடங்கி நடைபெற்றது. வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் மாணவியின் உறவினர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் இறுதி உடல் வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டது. அவரது வீட்டில் இருந்து அடக்கம் செய்யப்படும் இடம் வரை பொதுமக்கள் கண்ணீருடன் நடந்துசென்றனர். அவர்களுடன் மாணவியன் தந்தை, மற்றும் தம்பியும் கண்ணீருடன் சென்றனர்.
இதையடுத்து, மாணவியின் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுக்கு அவரது தந்தை இறுதி காரியம் செய்தார். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். மாணவியின் உடல் அடக்கம் அமைதியான முறையில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி நடைபெற்றது.