சென்னை: கள்ளக்குறிச்சியில் மர்மமான முறையில் மரணம் அடைந்த மாணவியின் உடல் 2முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவியின் பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை உயர்நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில் நாளை விசாரணை நடத்தப்படும் என அறிவித்து உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூறாய்வின்போது, தங்களது தரப்பு மருத்துவமனை நியமிக்க வேண்டும் மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடும்படி அறிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தது. இதனால் மாணவியன் பெற்றோர், மகளின் உடலை பெற்றுக்கொள்ள இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால், அவர்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை, அவரது பெற்றோர் பெற்றுக்கொள்ள கோரி காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான விசாரணையின்போது, மாணவியின் தரப்பு வழக்கறிஞர், எங்களது மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை, உயர் நீதிமன்றத்தை நாட சொல்லி அறிவுறுத்தியுள்ளது என தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர், மாணவியின் தந்தை தரப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் வாபஸ் பெற்று விட்டனர். எனவே உடலை பெற்று கொள்ள சொல்லுங்கள் என வலியுறுத்தினார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாளை தாக்கல் செய்யுங்கள் என கூறிய நீதிபதி, நாளை காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம் என்றும், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் எவ்வித மாற்றமும் செய்ய மாட்டோம் என்றும் கூறியுள்ளது.