சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம், அதைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் வன்முறையைத் தொடர்ந்து சென்னை கடற்கரையிலும் போராட்டம் நடைபெற உள்ளதாக பரவி வரும் தகவல்கள் காரணமாக, மெரினா கடற்கரை பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்த்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற வரலாறு காணாத வன்முறை தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வன்முறையை திட்டமிட்டு அரங்கேற்றிய சில அமைப்பினர், சென்னை கடற்கரையிலும் மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ,உழைப்பாளர் சிலை அதை போன்று நம்ம சென்னை, கலங்கரைவிளக்கம், கண்ணகி சிலை மற்றும் நேப்பியர் பாலம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்கரை பகுதியில் மொத்தமாக வருபவர்களிடம் விசாரணை நடத்தியும், சந்தேகத்திற்கு இடமான வகையில் கூட்டமாகவோ அல்லது பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாக திரிந்தாலோ அவர்களை மடக்கி விசாரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடாதவாறு, அவர்களை அங்கிருந்து விரட்டி வருகின்றனர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேலும் கள்ளக்குறிச்சி விவகாரம் முடியும் வரை தொடரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.