விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேருக்கு ஒரு நாள் சிபிசிஐடி காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தது, அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை போன்றவற்றை சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுமீதா விசாரணை இன்று நடைபெற்றது. இதையொட்டி கைது செய்யப்பட்ட 3 பள்ளி நிர்வாகிகள், 2 ஆசிரியைகளை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம்  ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு  விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 5 பேரையும், நாளை நண்பகல் 12 மணிக்கு  மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும்  நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டுள்ளார்.