கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 12ம்வகுப்பு மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக, இதுவரை 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பள்ளி முதல்வர் மற்றும் செயலாளர் ஆகியோருடன், கணிதம் மற்றும் வேதியியல் ஆசிரியர்களையும் சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூர் என்ற ஊரில் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தங்கி படிக்கும் வசதியும் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றன. இந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி என்பவர் கடந்த வாரம், விடுதி கட்டிடத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவியின் குடும்பத்தினர் மற்றும் அந்த ஊரைச்சோர்ந்தவர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து ஆனால், இதில் காவல்துறை மெத்தனம் காட்டிய நிலையில், நேற்று மக்கள் போராட்டம் வன்முறைக்களமாக மாறியது. பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பள்ளி பஸ்களை தீ வைத்து கொளுத்தியதுடன், பள்ளி கட்டிங்களையும் சேதப்படுத்தினர். அத்துடன், கலவரத்தை அடக்க வந்த காவல்துறையினர்மீதும் தாக்குதல் நடத்தியதுடன், காவல்துறையினர் வாகனத்தையும் தீ வைத்து எரிந்தனர். போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலர் பனிந்தர்ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரித்தனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வன்முறை தொடர்பான வீடியோக்கள் மூலம், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த கலவரத்தில் தொடர்புடைய 329 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சியில் ஈடுபடுதல், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
அத்துடன் பள்ளி முதல்வர், செயலாளர் உள்பட மேலும் 2 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.