சென்னை: மர்மமான முறையில் மரணமடைந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது, தனது மகளின் மரணத்துக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி, 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. கடந்த மாதம் 13-ஆம் தேதி கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் அடைந்தார். மாணவி 3-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாணவியின் பெற்றோர், மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குற்றம் சாட்டி வந்தனர். இந்த விவகாரத்தில், காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காததால், அங்கு பெரும் வன்முறையே நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பள்ளி கட்டிடமும் சேதப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மாணவியின் தாய் செல்வியிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறியிருந்தார். மாணவி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு, மாணவியின் உடல் 2வது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அந்த அறிக்கையை ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், இறந்த மாணவியின் பெற்றோர் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர். மாணவியின் தாயார் செல்வி, தந்தை ராமலிங்கம், சகோதரர் சந்தோஷ் ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து பேசி வருகின்றனர். மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு முதல்வரிடம் மனு அளித்தனர்.