சென்னை:

தினகரன் ஆதரவு அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பிய நிலையில், கள்ளக்குறிச்சி பிரவு அதற்கு பதில் அளிக்கவில்லை. இதன் காரணமாக, அவர்மீது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோல் டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால், அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் அவர்கள்மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம்  மனு கொடுத்தது. அதையடுத்து, இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் கிடைத்ததாகவும், அதை வழக்கறிஞர்களுடன் நாங்கள் மூன்று எம்.எல்.ஏக்களும் ஆலோசித்து தக்க பதிலை அனுப்ப இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் கள்ளக்குறிச்சி பிரபு வழக்கு போடவில்லை. இதன் காரணமாக, அவர் சபாநாயகர் கேள்விக்கு பதில் அளிப்பார் என பேசப்பட்டு வந்தது.

இந்த பரபரப்பான சூழலில், கள்ளக்குறிச்சி பிரபு சபாநாயகரிடம் இன்று பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சபாநாயகர் தனபால் இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.