சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் இழப்பை அனுசரிக்கும் விதமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும் படி ரசிகர்களிடம் தவெக தலைவரும் நடிகருமான விஜய்  வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய சாவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரசியல் கட்சியினர் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் நிவாரணங்களும் வழங்கி வருகின்றனர். அதுபோன்ற தவெக தலைவரும், நடிகருமான விஜயும் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரை பெண்கள் கட்டிபிடித்து அழுத காட்சிகள் பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டிலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி, அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடிகர் விஜயின் 50வது பிறந்தநாள்  (ஜுன் 22) வருகிறது.  இந்த  50 வயது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டு வந்தனர். மேலும்,  விஜய் நடித்து வரும் தி கோட் படத்தின் அப்டேட்  நாளை வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

இந்த நிலையில்,   கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடிந்து   உயிரிழந்தவர்களின் இழப்பை அனுசரிக்கும் விதமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்யுமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து @tvkvijayhq மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

எனவே தலைவர் அவர்களின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது