சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி 36ஆக உயர்ந்துள்ளது.   இது மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கவர்னர் ரவியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளச்சாராய சாவு தொடர்பாக  கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்ற சாராய வியாபாரி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகில் பதாகை வைத்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

 சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதை தடுப்பதில் தொடரும் குறைபாடு – கவர்னர் ஆர்.என்.ரவி

தி.மு.க., அரசின் நிர்வாக தோல்வி –  இபிஎஸ் குற்றச்சாட்டு

ஸ்டாலின் பதவி விலக வேண்டும் – ஓபிஎஸ்

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் வேலு பதவி விலக வேண்டும் – டாக்டர் ராமதாஸ்

அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் – அண்ணாமலை

கள்ளச்சாராயம் தடுக்கவே நல்ல சாராயம் என்றீர்கள் – இப்போ என்னாச்சு –   சீமான்

சாராய வணிகர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு – அன்புமணி ராமதாஸ்

மது இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் – வைகோ

கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின்  அலட்சியம் – நடிகர் விஜய்

ள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்திய பலருக்கு, கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலரின் நிலை மோசமடைந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் முதல்கட்டமாக  13 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் பலர் வயிற்று வலியால் துடித்த நிலையில், இந்த விவகாரம் பூதாகரமானது. உடனே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அருகே உள்ள அரசு மருத்துவமனையில்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவமனையில் உள்ள பலரது நிலை கவலைக்கிடமாக உள்ள உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் இருந்து 4 சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு, சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும்,சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

18 பேர் ஆம்புலன்ஸ்கள் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.  6 பேருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேல்சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.

கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாள சமய்சிங் மீனாவையும் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல் நடவடிக்கைக்காகவும் உடனடியாக CBCID வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவி:

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது சமூகவலைத்தள பக்கத்தில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்.

நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி

இது தொடர்பாக  அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று சட்டசபை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அதிமுக சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன். ஆனால், இச்சூழலில், இந்த விடியா திமுக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது. மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்! இவ்வாறு அந்த பதிவில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியான நிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியின் பொறுப்பு என்பது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதாகும். அதோடு அதற்கான போலீஸ் பிரிவை அவர் ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கள்ளச்சாராய புழக்கம் உள்ளது. இதனால் அமைச்சர் முத்துசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். காரணம் அவரது பணியை அவர் செய்யவில்லை. மேலும் இந்த கள்ளச்சாராய புழக்கத்துக்கு முதலமைச்சர் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த கதை தொடரக்கூடாது. இது ஒருபுறம் இருக்க மணல் கடத்தும் கும்பல் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தாசில்தார் தேவநாயகி மற்றும் அசிஸ்டென்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் விஏஓக்கள் துப்பாக்கியை பெற லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்கும் சூழல் உள்ளது. மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இது சாட்சியாகும்” என்று  தெரிவித்துள்ளார்.

பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுர தோட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.  அப்போது,   கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து 35 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. விஷச்சாராயத்தால் பலியான அனைவரும் ஏழை கூலி தொழிலாளர்கள். அவர்களின் குடும்பத்தினர் அல்லாடி தவித்து வருகின்றனர். கள்ளச்சாராய சாவுக்கு முக்கிய காரணமே அரசு செயலிழந்துள்ளது தான். எனவே இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்:

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததுடன், 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கஞ்சா, குட்கா, அரசு விற்கும் மதுவினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கவே நல்ல சாராயம் விற்பதாகக் காரணம் கூறிய திமுக அரசு, தற்போது கள்ளச்சாராய விற்பனையையும் தடுக்கத்தவறி 5 உயிர்களைப் பலிகொண்டுள்ளது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்குச் சீர்கெட்டுள்ளது என்பதையுமே காட்டுகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொடுந்துயரம் நிகழ்ந்தது. விழுப்புரத்தில் திமுக நிர்வாகியே கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதும், அவருக்கும் சேர்த்து திமுக அரசு நிவாரணத்தொகை அறிவித்த கொடுமைகளும் நடைபெற்றது.அதன் பிறகாவது திமுக அரசு விழிப்புற்று கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது மீண்டும் 5 உயிர்கள் பலியான துயரங்கள் நிகழ்ந்திருக்காது. அரசு விற்றால் நல்ல சாராயம்? தனியார் விற்றால் கள்ளச்சாராயமா? கள்ளச்சாராயத்தால் கண்ணுக்குமுன் அடுத்தடுத்து உயிர்கள் பலியாகும்போது மட்டும், மக்களின் மனக்கொந்தளிப்பிற்கு அஞ்சி உடனடி தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் திமுக அரசு, மெல்ல மெல்ல பல இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுவரும் மலிவு விலை மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன்? ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்ற திமுகவின் கடந்தகால வாக்குறுதி என்னானது? சாராய ஆலைகளை நடத்தும் திமுகவினர் தங்கள் ஆலைகளை இதுவரை மூடாதது ஏன்? கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர், அரசு நடத்தும் மதுக்கடைகளை இதுவரை மூடாதது ஏன்?திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனையைத் தடுக்கத் தவறியதும், வீரன் மதுபானம், கோதுமை பீர் வகை என்று டாஸ்மாக் மதுவிற்பனையை அதிகப்படுத்தியதுமே முதன்மையான சாதனையாகும். மகளிருக்கு உதவித்தொகை தருவதாகப் பெருமை பேசும் திமுக அரசு, டாஸ்மாக் மது மற்றும் கள்ளச்சாராயத்தால் தந்தையையும், கணவரையும், பிள்ளைகளையும், உடன் பிறந்தாரையும் இழந்து தவிக்கும் பெண்களுக்கு என்ன பதில் கூறப்போகிறது?

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாகவுள்ள போதைப்பொருட்கள் விற்பனையைத் தடுப்பதில் திமுக அரசு தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்? கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வினைவிட, திமுக அரசிற்கு மதுவிற்பனையால் வரும் பல்லாயிரம் கோடி வருமானமும், அதன் மூலம் நடைபெறும் ஆட்சி அதிகாரமும்தான் முக்கியமானதா? என்ற கேள்விகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது.

ஆகவே, கள்ளச்சாராய விற்பனையை முற்று முழுதாக தடுக்கக் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடத்தும் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

 கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்”  என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் நடிகர் விஜய்:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்  கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவத்தில் தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கள்ளச்சாராயத்துக்கு உயிரிழந்தோர் 34-ஆக அதிகரிப்பு! நடிகர் விஜய் கூறியிருப்பதாவது: “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது.

கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது. மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது.

கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான். கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ. வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போக மறுத்த காவல் துணைகண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதனால், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இதற்கெல்லாம் மேலாக கள்ளச்சாராய சாவு தொடர்பாக இப்போது கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்ற சாராய வியாபாரி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகில் பதாகை வைத்துள்ளார்.

கள்ளச்சாராய சாவு குறித்த செய்தி வெளியான பிறகு தான் நேற்று மாலை அந்த பதாகை அகற்றப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சாராய வணிகர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளது. கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரி மருவூர் இராஜாவுடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய உறவு இருந்தது அம்பலமானது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ:

இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 36 பேர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கற்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாரயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயத்தால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. கள்ளச்சாரய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் மதுவினால் அதிகரிக்கும் சமூக குற்றங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதும் வேதனை தருகிறது.

மது இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும். முழு மதுவிலக்கே நமது இலக்காக இருக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக தொடர்ந்து போராடி வருகிறது. கள்ளச்சாரய மரணங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதுடன், மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும் என வலியுறுத்துகிறேன். உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றுமாறு மருத்துவத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.