சென்னை: 65 பேரை பலிகொண்ட கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்த கள்ளச்சாராய வியாபாரி கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் உயிரிழந்த நிலையில், 15 பேர் கண் பாதிக்கப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி உள்பட மாநிலம் முழுவதும், கள்ளசாராய வியாபாரிகளை காவல்துறையினர் வேட்டையாடி வருகின்றனர். மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து வருஐகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அருகே மண்மலை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆறுமுகத்தை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை அறிந்த கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் தலைமறைவாகிவிட்டார்.
அவரை கைது செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,கள்ளசாராய வியாபாரி ஆறுமுகம் கேரள மாநிலம் அலங்குளத்தில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்த தனிப்படை போலீசார், அந்த பகுதி காவல்துறையினர் உதவியுடன், அலங்குளம் பகுதியில் பதுங்கி இருந்த ஆறுமுகத்தை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர், அவரை போலீசார் கச்சிராயப்பாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் 110 லிட்டர் கள்ளசாராயத்தை வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்த போலீசார், அவர் பதுக்கி வைத்திருந்த கள்ளசாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.