சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் இறப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனுமீது நாளை விசாரணை நடத்தப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்து உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. . இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மேலும் ஒருநபர் விசாரணை ஆணையத்தையும் அமைத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விரைந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்கள், சிகிச்சை பெறும் நபர்கள், மற்றும் இறந்தர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். இதைத்தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக தலைவர் பிரேமலதா, பாஜக தலைவர் அண்ணாமலை என அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அவர்களது மனுவில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வழக்கை வசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த மனுமீது நாளை விசாரணை நடத்தப்படும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதனிடையே, விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளச்சாராய பலி 36ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்…