கள்ளக்குறிச்சி: ஆட்சி, அதிகாரம் மட்டுமே முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கியம்; மக்கள் மீது அக்கறை இல்லை; கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்  என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.

கள்ளக்குறிச்சியில்  விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய எதிர்ககட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும் என்றவர்,  உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும் எனறு அதிரடியாக கூறினார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில்  கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலர் வயிற்று வலி மற்றும் கண் எரிச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மருத்துவமனைகளை நாடிய நிலையில், அவர்களின் பாதிப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை கள்ளக்குறிச்சி மட்டுமின்றி, அருகே உள்ள புதுச்சேரி, சேலம் உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  கள்ளச்சாராயம் குடித்தவர்களின் பலி எண்ணிக்கை 39ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழுப்பு மேலும் அதிகரிக்கும்எ ன அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில்  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரிடம் கள்ளக்குறிச்சி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி,  கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்!” என இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தை புறக்கணித்து விட்டு முதல் ஆளாக கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துஆறுதல் கூறினார். அதுபோல, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, இது “வேதனையான சூழல். கள்ளச் சாராயம் பருகி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு அதிகமான பேர் பாதிக்கப்பபட்டுள்ளனர் என்பது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழைகள். மாவட்ட தலைநகரில் காவல் நிலையத்துக்கு பின்புறமே சாராயம் விற்கப்படுகிறது. அப்படியெனில் திமுக ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். கள்ளச் சாராய விற்பனைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆளுங்கட்சியை சேர்ந்த அதிகாரமிக்கவர்களே இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். இல்லையெனில் இவ்வளவு துணிச்சலாக கள்ளச் சாராய விற்பனை நடைபெறுமா?.

அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார் பலமுறை எஸ்.பி.யிடம் விஷ சாராய விற்பனை குறித்து புகார் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் கஞ்சா, விஷச்சாராய விற்பனை இப்பகுதியில் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது என  புகார் கூறியும் காவல்துறை  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்று குற்றம்சாட்டினார். 

இதற்கு முன் விழுப்புரம், செங்கல்பட்டு பகுதியில் கள்ளச் சாராய மரணங்கள் நிகழ்ந்தபோதே அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வலியுறுத்தினேன். ஆனால் ஆளும் அரசு சிபிசிஐடி வசம் வழக்கை ஒப்படைத்தது. ஆனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவம் நடந்த உடன் வீர வசனம் பேசுகிறார்கள். பிரச்சினை முடிந்த பின் அதோடு விட்டுவிடுகிறார்கள்.

இங்கே சிகிச்சை பெறுபவர்கள் இன்னும் எத்தனை பலியாவார்கள் எனத் தெரியவில்லை. கள்ளச் சாராய உயிரிழப்புகளை பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ கள்ளச் சாராய விற்பனை குறித்து புகார் அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல் துறை முதல்வர் வசம் உள்ளது. இருந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது. திருச்செங்கோடு அருகே திமுக நிர்வாகி கள்ளச் சாராயம் விற்பனை செய்கிறார். போதைப்பொருள் விவகாரத்தில் பின்புலமாக திமுக தான் உள்ளது.

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். அது தான் பொருத்தமாக இருக்கும். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு இது. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆட்சி, அதிகாரம் தான் முக்கியம். வாக்களித்த மக்களோ, நாட்டு மக்கள் மீதோ அவருக்கு கவலை இல்லை என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000 அதிமுக சார்பில் வழங்கப்படும் என்றவர்,  உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுகவே ஏற்கும் எனறு அதிரடியாக கூறினார்.

அத்துடன்,  விஷச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது; ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என்றார்.

கள்ளக்குறிச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது! எம்எல்ஏ – பொதுமக்கள் நேரடி குற்றச்சாட்டு…

கள்ளச்சாராய பலி 36ஆக உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்…