சென்னை: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷமுறிவுக்கான மருந்துகள் கையிருப்பு உள்ளதை காட்டினால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பதவி விலகுவாரா? என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுக்கு திமுக பிரமுகர் கண்ணுக்குட்டிதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இவர் கடந்த 25 ஆண்டுகளாக அந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாகவும், இவருக்கு ஆளுங்கட்சியின் பின்புலம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காரணமாகவே அவரை கைது செய்யாமல் காவல்துறை காவல்காத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கண்ணுக்குட்டி விற்பனை செய்த விஷச்சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 57 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன என்றவர்,  அங்குள்ள மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்க போதுமான மருந்து இல்லை. அதுதொடர்பான  நான் சொன்ன மருந்து வேறு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் மருந்து வேறு.  நான் விஷச்சாராய முறவுக்கான ஹோமிபிசோல் மருந்தை சொன்னேன். ஆனால், அவர் ஓமிபிசோல் எனப்படும் அல்சர் மருந்தை சொல்கிறார் என்றவர், நான் சொன்ன மருந்தின் தட்டுப்பாடு இன்னமும் நிலவுகிறது என்று கடந்த இரு நாட்களுக்கு முன்பு  குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இரண்டு நாள் கழித்து, தற்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் தெரிவித்து உள்ளது.  கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மருந்துகள் இல்லாததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்; கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மேற்குறிப்பிட்ட மருந்துகள் உள்ளதா என்பதை அதிமுகவினர் கேட்டறிந்து கொள்ளலாம்;

“தமிழ்நாடு முழுவதும் 4 கோடியே 42 லட்சம் ஒமெப்ரஸோல் (Omeprazole)மருந்துகள் கையிருப்பு உள்ளது; அது அல்சர் போன்ற வியாதிகளுக்கு தரப்படுகிறது; ஃபோமெபிசோல் (Fomepizole) 4 கோடி 42 லட்சம் மருந்துகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ளது; மருந்துகள் கையிருப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் வெள்ளை அறிக்கை விடவேண்டும் என கூறியுள்ளார் அதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது”

மருந்துகள் கையிருப்பு உள்ளதை காட்டினால், எதிர்க்கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்வது அவரது தார்மீக கடமை”  என  சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு – 12 பேருக்கு கண்பார்வை பறிபோனது – 156 பேர்மருத்துவமனையில் சிகிச்சை…