சென்னை:

ள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, டிடிவி தினகரனை இன்று அவரது அடையாறு இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இதன் காரணமாக எடப்பாடி ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு காரணமாக சசிகலா தரப்பினர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஏற்கனவே டிடிவி தினகரனுக்கு 18 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அது குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு இன்று காலை டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே அதிமுகவில் சிலிப்பர் செல்கள் இருப்பதாக மிரட்டி வரும் டிடிவி, தற்போது அதிமுகவில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ வெளிப்படையாக சென்று பேசி வருவது எடப்பாடி தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விரைவில் தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், டிடிவிக்கு ஆதரவு தெரிவித்து வரும அதிமுக எம்எல்ஏக்கள் கூடி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.