ராமேஸ்வரம்,

றைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது கட்டப்பட்டு வரும் மணி மண்டபத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார்.

இன்று காலை 10 மணி அளவில் தனி விமானம் மூலம்  மதுரை வந்த பிரதமருக்கு  ஆளுநர் , கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், மதுரை கலெக்டர் வீரராகவ ராவ், போலீஸ் அதிகாரிகள், பாரதியஜனதா கட்சி தலைவர்கள்  உள்ளிட்டோர் வரவேற்றனர்

அதைத்தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டார். 11 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடைந்துள்ள பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் கலாம் மணி மண்டபம் அமைந்துள்ள  பேய்க்கரும்பு சென்றடைகிறார்.

காலை 12 மணியளவில் நினைவு மண்டபத்தை திறந்து வைக்கும் மோடி, பின்னர் 12.30 மணியளவில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

அப்துல் கலாமின் சாதனைகள் குறித்த பிரச்சார வாகன பயணத்தையும் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையாநாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் சாலை வழிப்பயணத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் கடலையொட்டிய பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.