சென்னை: அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ‘கலைப்புலி’ எஸ். தாணு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறு வனமான கலைப்புலி இண்டர்நேஷனல், வி கிரியேஷன்ஸ் அதிபர் கலைப்புலி எஸ்.தாணு. இவர் 1971ம் ஆண்டு விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கினார்.  தொடர்ந்து, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராகவும்,  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.   இவர் தற்போது, இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் .

ஜனவரி 1ந்தேதி தாணு இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக பதவி ஏற்க உள்ளார்.  இந்த பதவியில் அவர் ஒருவருடம் இருப்பார்.  அவருடன் தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாக சி. கல்யாண், சி.பி.விஜயகுமார், என்.எம். சுரேஷ், ஆனந்தா எல்.சுரேஷ், டி.பி.அகர்வால், செயலாளர்களாக ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர்.

திரைப்பயணத்தின் 50வது ஆண்டில், அவர் அகில இந்திய கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது, திரையுலகின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த பதவியில், பழம்பெரும் தயாரிப்பாளர்கள்.எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.