சென்னை: சென்னை புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருது யார்… யாருக்கு என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் ஜனவரி 8 ஆம் தேதி புதன் கிழமை அன்று காலை 8 மணிக்கு புத்தகக்காட்சி வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு, தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் (பபாசி – BAPASI) ) நடத்தப்படும் 48வது சென்னை புத்தகக் கண்காட்சி வரும் 27ந்தேதி தொடங்க உள்ளது. இந்த கண்காட்சியை துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இணைந்து தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பபாசி புத்தக்கண்காட்சி ஜனவரி 12-ஆம் தேதி வரை மொத்தம் 17 நாள்களுக்கு புத்தகக் காட்சி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் இடம்பெற உள்ளன. வேலைநாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும். அனைத்து நூல்களும் 10 சதவீத தள்ளுபடியுடன் வாசகா்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிலையில், புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி வருது தொடர்பான அறிவிப்பு வெளியகி உள்ளது. ஆண்டுதோறும் புத்த கண்காட்சி யில், நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, உரைநடை ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகளை வழங்கிய எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு, 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி வருது வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொற்கிழி விருது பெறுவோர்:
உரைநடைக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பேராசிரியர் அருணனுக்கு வழங்கப்படுகிறது.
நாடகத்துக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது கலைராணிக்கு வழங்கப்படுகிறது.
நாவலுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது விருது சுரேஷ் குமார் இந்திரஜித்துக்கும்,
சிறுகதைகளுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது என். ஸ்ரீராமுக்கும்,
கவிதைக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது நெல்லை ஜெயந்தாவுக்கும்,
மொழிப்பெயர்ப்புக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது நிர்மால்யாவுக்கும் வழங்கப்படுகிறது.
விருது பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
பபாசி விருது பெறுவோர் :
* சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணாதி விருது – கற்பகம் புத்தகாலயம்
* சிறந்த நூலகருக்கான விருது – Dr. R.கோதண்டராமன்
* சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது – பெல் கோ
* சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா விருது – எழுத்தாளர் ஜோதி சுந்தரேசன்
* சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது – முனைவர் சபா.அருணாச்சலம்
* சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது – பேராசிரியர் பர்வீன் சுல்தானா
* சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது – எழுத்தாளர் சங்கர சரவணன்
* முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தார் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது – மணவை பொன்.மாணிக்கம்
* சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருது – மரபின் மைந்தன் முத்தையா
மேலும் அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% கழிவு வழங்கப்படுகிறது. அதோடு மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. பள்ளி கல்லூரி நூலகங்களுக்கு கூடுதல் கழிவு வழங்கப்படும்.
ஓவியப்போட்டி :
* 1 முதல் 5-ம் வகுப்பு – இயற்கைக்காட்சி,
* 6 முதல் 8-ம் வகுப்பு – புத்தகக்காட்சி,
* 9 மற்றும் 10-ம் வகுப்பு – தமிழகத்தின் சுற்றுலா தலங்கள்,
* 11 மற்றும் 12 ஆம் வகுப்பு – சுதந்திர போராட்ட தியாகிகள்.
– போட்டிகள் ஜனவரி 7 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்கு புத்தகக்காட்சி வளாகத்தில் நடைபெறும்.
பேச்சுப்போட்டி :
* 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எனக்கு பிடித்த தேசத்தலைவர்கள் என்ற தலைப்பிலும்,
* 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு என் நாடு என் மொழி என் மக்கள் என்ற தலைப்பிலும்,
* 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் வாழ்க்கைக்கு வழி காட்டும் திருக்குறள் என்ற தலைப்பிலும்,
– வரும் ஜனவரி 8 ஆம் தேதி புதன் கிழமை அன்று காலை 8 மணிக்கு புத்தகக்காட்சி வளாகத்தில் நடைபெறும்.
பத்து இலட்சம் விலையில்லா அனுமதிச் சீட்டுக்கள் பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, நேஷனல் புக்டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை, ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள்.
இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது.
நிறைவுநாள் நிகழ்வில் நீதியரசர் ஆர். மகாதேவன் (உச்சநீதிமன்றம்) பங்கேற்கிறார்கள்.
இந்த ஆண்டு பபாசியில் உறுப்பினா் அல்லாத பலரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவா்களுக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாசகா்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.