சென்னை: பிப்.26-ம் தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் நினைவிடத்தில் பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் பிப்ரவரி 26ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் கடந்த 19ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும, நேற்று முன்தினம் வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (பிப்.22) நிறைவுபெறுகிறது. இன்றைய நிறைவு நாளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.
முன்னதாக இன்று காலை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துரை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வந்த கலைஞர் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்துவிட்டதாக கூறினார். மேலும், இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அச்சிடப்படவில்லை, சிறப்பு விழாவாக கொண்டாடவில்லை என்று கூறியவர், அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. இவை வரும் 26-ம் தேதி திறக்கப்படும் என கூறினார்.
மேலும், பிப்.26-ம் தேதி இரவு 7 மணிக்கு கலைஞர் நினைவிடம் திறக்கப்படும் இதில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.