சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதிக்கு மெரினாவில் கட்டப்பட உள்ள நினைவிடம் குறித்த மாதிரி புகைப்படத்தை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அண்ணா நினைவிட வளாகத்தில் கட்டப்பட உள்ள  கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. நிதிநிலை அறிக்கைகள் மீதான பொது விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுவருகிறது. அதன்படி, இன்று உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர்கள் கே.என். நேரு, பெரிய கருப்பன் ஆகியோர் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.

முன்னதாக  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் அண்ணா சமாதி வளாகத்தில் நினைவிடம் கட்டப்படும் என்று அறிவித்தார்.

தொடர்ந்து, “இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கருணாநிதி. 80 ஆண்டுகள் பொது வாழ்க்கை, 70 ஆண்டுகள் பத்திரிக்கையாளர், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 50 ஆண்டு கால திமுக தலைவராக இருந்தவர் கருணாநிதி. பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கருணாநிதி நின்ற தேர்தல் அனைத்திலும் வெற்றி பெற்றவர். ஜனநாயகப் பாதையில் இறுதிவரை உறுதியோடு வாழ்ந்தவர். தோல்வி தொட்டதே இல்லை. வெற்றி கைவிட்டதும் இல்லை, அதுதான் கருணாநிதி. இந்தியாவில் இவரைப் போல யாரும் இருந்ததில்லை என்ற வகையில் இருந்தவர் கருணாநிதி. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து மகத்தான திட்டங்களை, சட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி. நாம் வாழும் தமிழ்நாடு கருணாநிதிக்கு உருவாக்கிய தமிழ்நாடு. கனவு மாநிலத்தையே உருவாக்கியவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.