சென்னை: தமிழகஅரசு சார்பில் கலைச் செம்மல் விருதுக்கான தொகையினையும், விருதாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதன்படி, விருதுக்கான தொகை ரூ.1லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், மரபுவழி, நவீனபாணி கலைப்பிரிவுகளில் சிறந்த சாதனைகள் புரிந்த ஓவிய, சிற்பக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், கலைச்செம்மல் விருதுகள் தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. கலைச்செம்மல் விருது பெறும் கலைஞர்களுக்கு செப்புப்பட்டயம் மற்றும் விருதுத் தொகையாக ரூ.50,000/- வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த விருதுக்கான தொகையை உயர்த்தியும், விருதுபெறும் பயனாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24. 3. 2020 அன்று நடைபெற்ற கலை பண்பாட்டு துறை மானிய கோரிக்கையின் போது, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சரால் தமிழ்நாட்டில் ஓவியம் மற்றும் சிற்பக் கலை துறைகளில் மரபுவழி மற்றும் நவீன பாணி கலை பிரிவுகளில் புகழ் பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைச் செம்மல் விருது தொகையை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் விருதாளர்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஆறு ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, ஓவியம் மற்றும் சிற்பக் கலை துறைகளில் மரபு வழி மற்றும் நவீன பாணி கலை பிரிவுகளில் புகழ்பெற்ற அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைச் செம்மல் விருது தொகை 1 லட்சம் ரூபாய் என்றும், விருதாளர்களின் எண்ணிக்கை 6 ஆகவும் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழகத்தில், இதுவரை மரபுவழி பிரிவில் 16 ஓவிய, சிற்பக் கலை வல்லுநர்களுக்கும், நவீனபாணி பிரிவில் 47 ஓவிய, சிற்பக் கலை வல்லுநர்களுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.