காதல் கவிதைகள் – தொகுப்பு 8

Must read

 

காதல் கவிதைகள் – தொகுப்பு 8

 

பா. தேவிமயில் குமார் கவிதைகள்

 

அதிகமே !

 

ஒவ்வொரு யுகங்களிலும்

வரங்களையும்,

சாபங்களையும்,

சற்று அதிகமாகவே,

வாங்கி சலித்து

விட்டது இந்தக் காதல் !

இவ்வளவுதானா ? மனிதர்கள் என !

 

இனி …..

 

இனி நாம்

கணவன், மனைவி,

காதலன், காதலியல்ல !

என சொல்லும்போதே

வரையறுக்கப்பட்ட

நடைமுறைக்குள்,

காதல் சிக்கி விடுகிறது !

காதல் தன்மானம் மிக்கது – அதுவும்

காத தூரம் ஓடியது !

 

சமம்

 

நான் இதுவரைக்

காதலித்ததே இல்லை !

எனக் கூறுவோர்,

இதுவரை நான்

உயிரோடு இல்லை

எனக் கூறுவதற்கு

சமம் ! ஆகும்

 

ஒரு சுவாசம்

 

ஒரு புன்னகை,

ஒரு ப்ரியம்,

ஒரு சுவாசம்,

ஒரு ஜீவிதம்,

இருவருக்கும் போதுமென

காதலித்தோம் !

ஆனால், சமுதாயமோ,

“ஒரு ஜாதி”

என்ற கூரிய ஆயுதத்தால்

பிரித்தனர் காதலை !

 

வருடங்களானாலும்

 

உன் நினைவுகள்

உயிர்ப்போடு

விழிமூடி உறங்குகிறது

ஒரு சேர

உன்னுள்ளும்,

என்னுள்ளும் !

எத்தனை, எத்தனை

வருடங்களானாலும் !

 

இக்கரைக்கு…..

 

நிராகரிக்கப்பட்டக்

காதல் யோசித்தது,

அங்கீகரிக்கப்பட்ட

காதல் எப்படியிருக்குமென

ஆனால்…..

அங்கீகரிக்கப்பட்டக்

காதலோ,

இது என்ன

வாழ்க்கை ? என

தலையில் கை வைத்து

யோசித்துக் கொண்டிருந்தது !

 

வேண்டுதல்கள்

 

வரும் வழியில்

கடவுளைப் பார்த்தேன்

என்றது காதல் !

கடவுளோ,

வழியெல்லாம்

காதலுக்கான

வேண்டுதல் படிவங்கள் !

கடந்து வர

போதுமென்றாகி விட்டது

என பேசியவாறே

என்னைக் கடந்து சென்றார் !

 

உரையாடல்

 

காதலர்களின்

உரையாடலைக்

கேட்டிட,

ஆடை மாற்றி

வந்தது “புயல்”

“தென்றலாக”

 

செரித்தல்

 

சாதியைத் தின்று

செரிக்கும்

சமூகமே !

இன்னும் எத்தனை

காலங்களுக்குத்தான்

காதல் எனும் கலயத்தில்

சாதியை ஊற்றி வைத்திருப்பீர்கள் !

 

பிரபஞ்சம்

 

காதல் என்பது

இசையுமல்ல,

இம்சையுமல்ல,

கடவுளுமில்லை,

சாத்தானுமில்லை,

ஒரு துளியுமில்லை,

பெருங் கடலுமில்லை,

அது ஆணுமல்ல,

அப்படியானால் பெண்ணுமல்ல,

லட்சணமுமில்லை,

அவலட்சணமுமில்லை,

லட்சியமுமில்லை,

அலட்சியமுமில்லை,

அப்படியானால்….

காதல் என்பது,

அறிந்தும், அறியமுடியாத

“பிரபஞ்சம்” போன்றதே ?

 

– பா. தேவிமயில் குமார்

More articles

Latest article