காதல் கவிதைகள் – தொகுப்பு 5
பா. தேவிமயில் குமார் கவிதைகள்
வண்ணம்
வண்ணங்களை
வசமாக்கிய
வானம் அழகென்றனர் !
உன் வண்ண
உடைகளை அன்று நீ
உலர்த்திய போது
வானம்…..
ஒளிந்திருந்து,
பார்த்ததை நானறிவேன் !
பாதை
எழுத்துக்கள்
என்னவோ, மூன்றுதான்
ஆனால்….
அதன் பாதைகள்வேறு !
தயவு செய்து
இணைத்துவிடாதீர்கள்
சமுதாயமே ! ஒன்றாக,
காதலையும், நட்பையும் !
அழைப்பிதழ்
உன் திருமண
அழைப்பிதழை,
இன்னும் வைத்திருக்கிறேன் !
என்றாய்,
ஏனென்றேன் ?
வாய்ப்புகளைத்
தவற விட்டதற்காக
அல்ல…
வாழ்க்கையைத்
தவற விட்டதற்காக
என்றாய் !
என் ஒருதலைக் காதலே !
காலம் கடந்தாலும்
காயங்கள் ஆறாதோ ?
ஆரம்பம்
அன்றொரு நாள்,
போருக்கும்,
வியாபாரத்திற்கும்
சென்றவனுக்காகக்
காத்திருந்தோம் ! விழித்திருந்தோம்
கட்டிக்காத்தோம், மனையை !
அப்போது தெரியவில்லை
அன்பின் பணியை
அடிமைப் பணியாக மாற்றும்
ஆரம்பம் இதுவென !
மௌனம்
நாம் அமர்ந்திருந்த
அறை முழுவதும்
இசை நிரம்பி,
இறங்கி சென்றது !
உன்னுடனான
மௌனத்தைப் போல !
உன் மௌனம்
இசையென்றால்,
நீ பேசினால் அது
இயலா ? நாடகமா ?
வேறு வழியின்றி
ஆண், பெண்
நட்பினை
அவலத்துடன்
பார்த்திடும் சமூகமே !
காதல் எனும்
வர்ணத்தினை,
நட்புடன்
கலந்து விட்டதால்,
வேறு வழியின்றி
விதியே ! என
மணம் செய்த
நண்பர்கள் இங்கு
ஏராளமே ! அதன்
வலிகள் அதை விட
ஏராளமே !
கவிஞர்
எப்படி விரசமாக
எழுதினாலும்,
ஏற்றுக்கொள்ளும்
சமுதாயம்…..
எழுதியது ஆணென்றால் !
ஆனால்….. ஒரு பெண்
காதலைப்பற்றி
சற்று ஆழமாக
எழுதினால் கூட,
“இவள் எப்படியோ ?”
என எண்ணும்
சமூகமிது !
புதிய சங்ககாலம்
ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகு
நம் காலத்துக்
காதலையும்
புதிய சங்க கால
காதலெனப்
பாடுவார்களோ ?
ஏனென்றால்…
தலைவன்,
தலைவி,
தோழி,
செவிலித்தாய்,
தூது,
சந்தேகம்,
நீர் விளையாட்டு,
நறுமணப்பூக்கள்,
பசலை நோய்,
காதல் கிசு, கிசு,
உடன் போக்கு
என இன்னும்
ஏராளமாய்
நம் காலத்தோடு,
நமது சங்ககாலக்
காதலின் வரிகள்
நிறையவே உள்ளதே !
இன்னும்,
கணினியையும்,
கைபேசியையும்,
திரைக்காவியத்தையும் கூட
திகட்டத் திகட்ட
சேர்த்துப் படிப்பார்களோ ?
வழி, வலி, மற்றும் வளி
உன்னை அடைய
அன்று “வழி”
தெரியாமல், தடுமாறினேன் !
அதன் “வலி”
இன்றுவரை வலிக்கிறது !
இனியும் என்
“வளி” குறையும் வரை
வலிக்குமென்பது
தெரியும் காதலே !
என்ன செய்வது ?
வந்த காதலை
விரட்டத் தெரியாதவர்களின்
விதி இதுதான் !
இனக்கவர்ச்சி
இனக்கவர்ச்சிக் காதல்
இது என, என்
பருவ காலக் காதலை
பேசி புரிய வைத்தார்
என் தந்தை, பின்
என் திருமண வயதில்
தன் “இனத்தின்” மேலுள்ள
“இனக்” கவர்ச்சியால்
தினம், தினம்
“வரன் தேடுகிறார்”
இப்போது
யோசித்துப்பாருங்கள்,
யாருக்கு இங்கே
இனக்கவர்ச்சியென்று ?
– பா. தேவிமயில் குமார்