கடைக்கோடி கிராமம். ஊர் மக்கள் பலர் வேறு தொழில், வேலைகளை நாடிச்செல்ல, இன்னும் விவசாயம் செய்து வருகிறார் முதியவர், மாயாண்டி.

அத்தனை உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் வெள்ளந்தி மனிதர். பயிர்களை தனது உயிராக மதிக்கக்கூடியவர்.

தனது தோட்டத்துக்கு அருகில் மூன்று மயில்கள் இறந்துகிடக்க, அவற்றை புதைக்கிறார். காவல்துறையோ, அவர் மயிலைக் கொன்று புதைத்ததாக கைது செய்கிறது.

இதற்கிடையே, கிராமத்து கோயில் விழாவுக்கு ஏற்பாடு ஆகிறது. அதற்கு நல்லாண்டி தான் ‘முறை நெல்’ தரவேண்டும். அதற்காக தனது வயலில் நெல் விளைவிக்கிறார்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதால், நெல் என்னாகுமோ என்று கவலைப்படுகிறார்.

அவர் விடுதலை செய்யப்பட்டாரா, ஊர்த்திருவிழா நடந்ததா என்பதுதான் கதை.

மாயாண்டியாக நல்லாண்டி நடித்திருக்கிறார்.

தான் கைது செய்யப்பட்டிருப்பது கூட தெரியாமல், நீதிபதியிடம், ‘நெல்லுக்கு தண்ணி பாய்ச்சணும்.. கிளம்புறேன்’ என்கிறார் அப்பாவியாக. தவிர காதும் கேட்காது.

அவரது வயதுக்கு உண்மையிலேயே அப்படி இருந்திருக்கலாம். அதை மிகத் திறமையாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

எந்த விசயத்துக்கும் பெரிதாக முகக்குறி காட்டுவதில்லை அவர். ஆனால் அவரது காதுகேளாமையும் முதிய வயதும் அப்படியே அவரை ஏற்க வைக்கின்றன.

அவரைப்போலவே படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்கள் அனைவருமே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்றால் விஜய் சேதுபதியும், யோகிபாபுவும்தான்.

இருவருமே படத்துக்கு தேவையில்லாத கதாபாத்திரங்கள். அதுவும் அதிக காட்சிகளில் வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் ஏன் என்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் படத்தில் ஏகப்பட்ட குறியீடு வைக்கிறார்களே.. அப்படி ஏதும் குறியீடா என தெரியவில்லை.

படத்தில் நீதிமன்ற காட்சிகள் சிறப்பு. நீதிபதியாக வரும் ரேய்ச்சல் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்குநர் மணிகண்டனே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒதுங்கிய கிராமம், ஒடுங்கிய மக்கள்.. அற்புதமாக படமாக்கி இருக்கிறார்.

படத்தில் வசனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

“விதையில்லாத தக்காளியா… இதைக் கண்டு பிடிச்சவனுக்கு ஆம்பள புள்ள பொறந்து, விதைப்பை இல்லாம இருந்தா தெரியும்” – என்பது ஒரு உதாரணம்.

சந்தோஷ் நாராயணின் இசையில் இரண்டு பாடல்களும் மயக்குகின்றன. சந்தோஷ் நாராயண், ரிச்சர்டு ஹார்வி கூட்டணியின் பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

படத்தில் கதை என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை.

ஒரு முறை இயக்குநர் பாலு மகேந்திரா, “நான் இயக்கிய மூன்றாம் பிறை படத்தில் கதை என்று ஏதும் இல்லை. சம்பவங்களின் தொகுப்புதான் அது”என்றார்.

அந்த வகையில் படம் எடுத்திருக்கிறார் போலும் மணிகண்டன்.

ஆனால் நீள நீள காட்சிகளை குறைத்திருக்கலாம். படத்தின் நீளத்தையும் ஒட்டுமொத்தமாக குறைத்திருக்கலாம்.

ஆனாலும், ஒரு கிராமத்துக்குள் நுழைந்து வெள்ளந்தி மக்களை நேரில் சந்தித்துவிட்டு வந்த உணர்வைத் தருகிறது படம்.

ஆகவே பார்க்கலாம்.