கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு ராமேஸ்வரத்தில் இருந்து 371 பக்தர்கள் படகில் புறப்பட்டனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழா மார்ச் 06 மற்றும் மார்ச் 07 ஆகிய 2 நாட்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட இலங்கையைச் சேர்ந்தவர்களும் அங்கு வருவது வாடிக்கையானது.
இந்த ஆண்டு அங்கு நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து பதிவு செய்த பக்தர்கள் ராமேசுவரத்தில் உள்ள கச்சத்தீவு யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளர் தேவசகாயம் தலைமையில் செல்கின்றனர். இதற்காக 3,004 பயணிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களை அழைத்துச் செல்வதற்காக 77 விசைப்படகுகளும், 25 நாட்டுப் படகுகளும் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த படகுகள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்யப்பட்ட நிலையில், நேற்று தமிழக பக்தர்கள் 371 பேர் முதல்கட்டமாக நாட்டு படகுகளில் கச்சத்தீவு புறப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 72 விசைப்படகுகளில் 2,532 பக்தர்களும் புறப்பட்டுச் சென்றனர்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவை நெடுந்தீவு பங்குத்தந்தை எமிழிபால் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். கூட்டு திருப்பலியை தமிழக பங்குத்தந்தையர்கள், இலங்கை யாழ்ப்பாணம் ஆயர், சிங்கள ஆயர்கள் நடத்துகின்றனர். தமிழ் மற்றும் சிங்களத்தில் நடைபெறும் கூட்டு திருப்பலியில் இலங்கை, தமிழக பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
கச்சத்தீவுக்கு சென்று திரும்புவோரை வரும் 7 ஆம் தேதி மாலையில் ராமேஸ்வரத்தில் கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்த மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.