எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் கவிதை, சிறுகதை, நாவல் என அனைத்துப் படைப்புகளையும் காட்சிப்படுத்தும் சிறப்பு காணொளி வெளியிடப்பட்டு உள்ளது.

உலகம் யாவையும் என்ற கவிதைத் தொகுதியில் தொடங்கி அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பு வரை கபிலன் வைரமுத்துவின் ஒவ்வொரு படைப்பும் வெவ்வேறு களங்களில் இயங்கும் படைப்பாக அமைந்திருக்கின்றன.

பூமரேங் பூமி என்ற தன் முதல் நாவலில் ஆஸ்திரேலிய பழங்குடியினரான அபொரிஜின்ஸ் குறித்தும் அவர்களுடைய வாழ்வியல் குறித்தும் பதிவு செய்திருந்தார். நவீன உலகம், தொழில்நுட்ப வசதி நிறைந்தது – தொழில்நுட்ப வசதி அற்றது என இரண்டாகப் பிரிந்திருக்கும் ‘டிஜிட்டல் டிவைட்’ என்ற ஏற்றத்தாழ்வைக் குறித்து பூமரேங் பூமி நாவலில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. பூமரேங் பூமி ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

கபிலனின் இரண்டாவது நாவலான உயிர்ச்சொல், குழந்தை பிறந்ததும் சில பெண்களுக்கு ஏற்படும் மனப்பிறழ்வு குறித்து ஆழமாக பதிவு செய்த ஒரு மருத்துவ படைப்பு. இன்றைய ஊடகங்கள் எவ்வாறு இயங்குகின்றன இதில் வணிக நிறுவனங்களின் பங்கு என்ன என்பதை ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தின் வழி சொல்லப்பட்ட நாவல்தான் கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி.

இது சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடமாக கற்பிக்கப்பட்டது. இந்த நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட ‘கவண்’ திரைப்படமும் அதில் கபிலன் வைரமுத்து எழுதிய வசனங்களும் பொதுவெளியில் ஊடக உலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

2020ஆம் ஆண்டு வெளிவந்த கபிலன் வைரமுத்துவின் அம்பறாத்தூணி தனித்துவம் வாய்ந்த சிறுகதைத் தொகுப்பு. இந்திய சுதந்திரத்தின் முதல் சிப்பாய் புரட்சியான வேலூர் புரட்சி,வெள்ளையர்க்கு எதிராக போர் புரிந்த மாமன்னர் பூலித்தேவனின் ராணுவ முகாம், ரஷ்யாவில் டுகோபர்ஸ் என்ற ஒடுக்கப்பட்ட மதப்பிரிவனர், டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் என தொகுப்பு முழுக்க வெவ்வெறு களங்கள் வெவ்வேறு காலக் கட்டம் என கடுமையான கள ஆராய்ச்சிக்குப் பின் இந்த கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.

என்றான் கவிஞன், மனிதனுக்கு அடுத்தவன், கடவுளோடு பேச்சுவார்த்தை, மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை என பல கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கிறார்.

கபிலன் வைரமுத்துவின் படைப்புகளைத் தொகுத்துச் சொல்லும் ஏற்பாடாக அனைத்துத் தலைப்புகளையும் காட்சிப்படுத்தும் காணொளி ஒன்று பதிப்பகம் சார்பாக வெளியிடப்பட்டிருக்கிறது.