சென்னை: சென்னை மக்கள் நாளை காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், வண்டலூர் பூங்கா உள்பட சுற்றுலா ஸ்தலங்கள் நாளை திறந்திருக்கும் என்றும், கடற்கரைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால்,  சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காணும் பொங்கல் விடுமுறையை சென்னைவாசிகள் மற்றும் அண்டைய மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும்,  குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும்  வகையில் வழக்கமாக செவ்வாய்கிழமை விடுமுறை அளிக்கப்படும்  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா  உள்பட சுற்றுலா ஸ்தலங்களில், நாளை வழங்கம்போல் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  வண்டலூர், மெரினா பீச் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உளளது, நாளை  பார்வையாளர்களின் இருக்குமென்பதால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, உயிரியல் பூங்கா நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நுழைவுச் சீட்டு வழங்கப்படும் இடத்தில், பொதுமக்களிடையே நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, 20 டிக்கெட் கவுன்டர்கள் முழுமையாகச் செயல்படுவதோடு, கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படும். மேலும், ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு கவுன்டர் அமைக்கப்படும்.

பார்வையாளர்களை வரிசையில் சீராகவும், விரைவாகவும் அனுப்ப ஒவ்வொரு டிக்கெட் கவுன்டரையும் சவுக்கு கொம்புகள் கொண்டு தனியாக தடுப்பு அமைக்கப்படும். நுழைவுசீட்டு வழங்கிய பிறகு, பூங்காவினுள் பார்வையாளர்கள் விரைவாக செல்வதற்கு ஒரே நேரத்தில் 10 வரிசைகளில் சோதனை செய்யப்பட்டு தடைசெய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பூங்கா நுழைவு வாயிலிலேயே காவல் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்படும்.

பொங்கல் விடுமுறை நாட்களில், பார்வையாளர்களின் வசதிக்காக, வண்டலூர் வழித்தடத்தில் கூடுதலாக 150-ற்கும் மேலான பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகத்தை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 வயதுக்குட்பட்ட சிறியவர்கள் காணாமல் போகும் சூழ்நிலைகளைத் தவிர்க்க சிறியவர்களின் கைகளில் மணிக்கட்டு பட்டை கட்டப்பட்டு அதில் பெற்றோர்களின் தொலைபேசி எண்கள் எழுதப்படும்.

கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில், காவல்துறை ஊழியர்களுடன் கண்காணிப்பு கேமரா ஆபரேட்டர்கள் தொடர்ந்து கண்காணித்து, குழந்தை காணாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், குழந்தைகளை கண்டறிவதில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்கலிகள் வழங்கப்படும்.

16.01.2023 மற்றும் 17.01.2023 ஆகிய தேதிகளில் பார்வையாளர்களுக்காக சிறப்பு உதவி மையம் மற்றும் மருத்துவ உதவி மையம் பூங்காவின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும். மருத்துவக் குழுவுடன் 4 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் உயிரியல் பூங்காவிற்குள் எந்த அவசரச் சூழலையும் கையாள நிறுத்தப்படும். பூங்காவில் உள்ள கழிப்பறைகளுடன், கூடுதலாக 15 எண்ணிக்கையிலான உயிரி கழிப்பறைகள் பூங்காவின் பல்வேறு இடங்களில் வைக்கப்படும். தடையில்லா மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் விலங்குகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.ஊண் உண்ணி விலங்கு இருப்பிடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிக்காக சீருடை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களுக்காக கூடுதல் அங்கீகரிக்கப்பட்ட குத்தகை விற்பனை நிலையங்கள் 1 உணவகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17.01.2023 அன்று (காணும் பொங்கல்) செவ்வாய்க் கிழமை பார்வையாளர்களுக்காக பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து மாற்றம்:

காணும் பொங்கலையொட்டி சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து  போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 17 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில் பெருந்திரளாக மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

காமராஜர் சாலையில் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகமாகும் வரை எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட மாட்டாது.

உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை அருகில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகும்போது, வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் பாரிமுனை – முத்துசாமி பாயினட் – வாலாஜா பாயின்ட் – அண்ணாசாலை பெரியார் சிலை – அண்ணாசிலை – வெல்லிங்டன் பாயின்ட் – ஸ்பென்சர் சந்திப்பு – பட்டுளாஸ் சாலை – மணி கூண்டு – GRH பாயின்ட் வழியாக டாகடர் ராதாகிருஷ்ணன் சாலை சென்று, தங்களது இலக்கினை அடையலாம்.

அடையாறிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில், திருப்பப்பட்டு பாரதி சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை வழியாக அண்ணாசாலை சென்று தங்களது இலக்கினை அடையலாம். மேலும் பாரதி சாலையானது கண்ணகி சிலையிலிருந்து ஒருவழிப் பாதையாகவும், வாலாஜா சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு வாகனங்கள் செல்ல தடை செய்தும் பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் ரோடு நோக்கி வாகனங்கள் அனுமதிக்கவும் செய்யப்பட்டுள்ளது (பெல்ஸ் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும்).

இவ்வாறு கூறப்பட்டுடள்ளது.