நியூஸ்பாண்ட்:

“விரைவில் வெளியாக இருக்கும் ரஜினயின் காலா படம் பற்றித்தான் அரசியல் வட்டாரத்திலும் பேச்சு!” என்றபடியே வந்து தனது நாற்காலியில் ஜம்மென்று அமர்ந்தார் நியூஸ்பாண்ட்.

வெயிலுக்கு இதமாய் தயாராக வைத்திருந்த நீர் மோரை அவர் முன் நீட்டியபடியே, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று அங்கு சென்றிருக்கிறார் ரஜினி. நீர், காலா பற்றி பேசுகிறீரே..!”

“பல பிரமுகர்களும் தூத்துக்குடி சென்று வந்ததைப் போலத்தான் ரஜினியும் செல்கிறார். மற்றபடி காலா தானே அவருக்கு இப்போது முக்கிய விசயம்..!”

குமாரசாமி – ரஜினிகாந்த்

“அதுவும் சரிதான்!”

“காலாவில் சில கட்சிகளில் மறைமுகமாக.. ஆனால் கடுமையாக தாக்கி அந்தப் படத்தில் வசனங்கள் இருக்கிறதாம். அதனால்தான் அரசியல் வட்டாரத்தில் எதிர்ப்பார்ப்பு” என்றார் நியூஸ்பாண்ட்.

“காலா பற்றி வேறு என்ன செய்தி?“

”கன்னட வெறியர் வாட்டாள் நாகராஜ், வழக்கம் போல, “காலா” படத்தையும் கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்!”

“ஆமாம்! கர்நாடகத்தில் பருவ மழை பொய்த்துப் போனதால் அனைத்து அணைகளிலும் போதுமான நீர் இல்லை.   மாநில மக்கள் அனைவரும் குடிக்கக்கூட தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு தண்ணீர் தேவை என குரல் கொடுக்கிறார்.  ஆகவே அவரது படத்தை இங்கே திரையிட விடமாட்டோம் என்று சொல்லியிருக்கிறாரே..! கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையும் காலாவுக்கு தடைவிதித்திருக்கிறதே..”

“ஆம்..! இது போன்ற சமயங்களில் கன்னடர்களிடம் சமாதானமாக பேசுவது ரஜினி பாணி. அவரது “குசேலன்” பட ரிலீஸின் போதும் இப்படி பிரச்சினை வந்தது. உடனே, கன்னர்கள் காவிரிக்காக குரல் கொடுங்கள். நான் ஆதரிக்கிறேன் என்று பேசி சமாளித்தார் ரஜினி!”

“ இப்போது எப்படி சமாளிக்கப்போகிறாராம்?”

“ரஜினியின் கன்னட நண்பர்கள் காலாவுக்காக வாட்டாள் நாகராஜிடம் பேசியிருக்கிறார்களாம். கர்நாடக முதல்வர் குமாரசாமியிடமும் சிலர் பேசினார்களாம். ரஜினி சொல்லித்தான் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாம். குமாரசாமி, “காலா கர்நாடகத்தில் வெளியாவதை கன்னடர்கள் விரும்பவில்லை” என்று சொல்லி அதிர்ச்சி ஏற்படுத்தினாராம்!”

“ஓ…”

“ஆனாலும், ஏதேனும் பேரம் நடக்கக்கூடும் என்கிறார்கள்!”

“அப்படியா..”

““அப்படித்தான் சொல்கிறார்கள்.. கூடுதல் தகவல்களோடு மீண்டும் வருகிறேன்..” – சொல்லிவிட்டு கிளம்பினார் நியூஸ்பாண்ட்.