திருவனந்தபுரம்: நாடு முழுவதும் தேர்தல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்  சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் உள்ளது. இதை அவரே தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி பல ஆண்டுகளாக காங்கிரஸ் கோட்டையாக திகழ்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் ராகுல் காந்தி  இங்கு போட்டியிட்டு எம்.பி.யான நிலையில், தற்போது 2வது முறையாக மிண்டும் போட்டியிடுகிறார். இங்கு, அவரை எதிர்த்து,    இண்டியா கூட்டணி சார்பில், கம்யூனிஸ்டு வேட்பாளராக ஆனி ராஜாவும்,  பாஜக வேட்பாளராக, கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். இதனால், அங்கு தேர்தல் களம் கதகதவென இருக்கிறது.

பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன்  கடந்த 2020ம் ஆண்டு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து,  2009 முதல் மூன்று மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். நான்குமுறை சட்டமன்றத் தேர்தல்களிலும் களமிறங்கியுள்ளார். ஆனால், இதுவரை வெற்றி பெறவில்லை. கடந்த 2016ல் மஞ்சேஷ்வர் தொகுதியில் போட்டியிட்ட சுரேந்திரன்  வெறும் 86 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.  அதுபோல 2019ம் ஆண்டு இடைத்தேர்தலில் தோல்வியையே சந்தித்தார். இந்த நிலையில், தற்போது ராகுல்காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது வழக்குகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும்படி விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,   சுரேந்திரன் மீதான வழக்குகள் தொடர்பான விளம்பரம் கேரள மாநில செய்தித்தாளில் வெளியிடப்பட்டு உள்ளது.

அதன்படி, சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில், 237 வழக்குகள் சபரிமலை போராட்டங்கள் தொடர்பானவை எனவும், 5 போராட்டங்கள் கேரளாவில் பாஜக முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள் தொடர்பானவை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சுரேந்திரன் மீதான குற்றவழக்குகள் தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பாரத்தின் சில பகுதிகளில் தேசியவாதியாக இருப்பது கடினம். இது அன்றாடப் போராட்டம். ஆனால் அது போராட்டத்திற்கு மதிப்புள்ளது” என குறிப்பிட்டு சுரேந்திரன் மீதான வழக்குகள் தொடர்பான விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், பெண்கள் நுழைவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக பாஜக மற்றும் அதைச் சார்ந்த கட்சிகள் 2018ல் மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுத்தன. அந்த போராட்டங்கள் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில், பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதேபோன்று, எர்ணாகுளம் தொகுதி பாஜக வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீது சுமார் 211 வழக்குகள் நிலுவையில் உள்ளன.